`ஸ்டாலின் கண் அசைவுக்காக மட்டுமே அரசியல் செய்கிறது காங்கிரஸ்’ - போட்டுத் தாக்கும் புதுச்சேரி அதிமுக
புதுச்சேரியில் நடைபெற்று வரும் 2025-2026 பட்ஜெட் கூட்டத்தொடரில், `அரசின் நிதியுதவி பெறாத சிகப்பு ரேஷன் கார்டு உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,500, மஞ்சள் நிற ரேஷன் கார்டு உள்ள குடும்பத் தலைவிக்கு ரூ.1,000 வழங்கப்படும்’ என்று அறிவித்திருந்தார் முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி. அதையடுத்து அரசுக்கு எதிரான போராட்டம் ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, ``முதல்வர் ரங்கசாமி குடும்பத் தலைவிகளுக்கு உதவித் தொகைகளை உயர்த்தி வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.
ஆனால் அதை வாங்குவற்கு மக்கள் உயிரோடு இருக்க வேண்டுமே ? எப்படி நீங்கள் சாராயக் கடைகளை திறக்கிறீர்களோ, ரெஸ்டோ பார்களை திறக்கிறீர்களோ, அதேப்போல அந்த மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் பிரச்னைகளையும் சரி செய்ய வேண்டும்” என்று பேசியிருந்தார்.

போட்டுத் தாக்கும் புதுச்சேரி அதிமுக
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியிருக்கும் புதுச்சேரி அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன், ``கடந்த சில நாட்களாக ஓடும் வண்டி, ஓடாத வண்டி, டப்பா வண்டி, காயிலான்கடை வண்டி என்று தி.மு.க-வும், காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி விமர்சித்துக் கொண்டனர். கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரம் ஏதோ புதுச்சேரியிலுள்ள தி.மு.க மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு இருப்பதைப் போல ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு கூறி வந்தனர்.
ஆனால் புதுச்சேரிக்கு வந்த தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காங்கிரஸ் கட்சியை எச்சரித்து பொதுக்கூட்டத்தில் பேசியவுடன் காங்கிரஸ் கட்சி தற்போது பயந்து அடங்கிப்போய் விட்டது புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் பலவீனத்திற்கு இது ஒரு உதாரணம். காங்கிரஸ் கட்சியை அடக்கி ஆளும் தமிழக தி.மு.க-வின் உண்மை நிலையை இங்குள்ள உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் உணர வேண்டும்.
ஆறு எம்.எல்.ஏ-க்களை வைத்துக் கொண்டு அரசின் தவறுகளையும், முறைகேடுகளையும் தட்டிக்கேட்க திராணியற்ற கட்சியாக இருக்கிறது புதுச்சேரி தி.மு.க. சட்டமன்றத்தில் தற்போதைய நடவடிக்கைகளை பார்க்கும் போது, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி, என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க-வுடன் தி.மு.க கூட்டணி வைத்திருப்பதாக தெரிகிறது. அரசின் நிதியுதவி பெறாத குடும்பத் தலைவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தது பாராட்டுதலுக்குரிய திட்டம்.
ஒரு உன்னதமான திட்டம் அறிவிக்கும் போதே அதை வாங்க மக்கள் உயிரோடு இருப்பார்களா என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அபசகுனமாக சாபமிட்டுள்ளார். இப்படித்தான், `ஒவ்வொரு வீட்டிற்கும் குழந்தைகள் தவிர எல்லாவற்றையும் கொடுக்கிறோம்’ என்று பேசி பெண்களின் வெகுஜன எதிரியாக உள்ளார். அப்படியும் தன்னை திருத்திக்கொள்ளாமல் பொறுப்பற்ற முறையில் பேசுவது முன்னாள் முதல்வருக்கு அழகல்ல.

கடந்த தி.மு.க காங்கிரஸ் ஆட்சியில் விதவை, முதியோர் நலத்திட்ட உதவிக்கு புதியதாக விண்ணப்பித்தவர்களில், ஒருவருக்கு கூட வழங்காமல் புண்ணியத்தை தேடி சென்றவர் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி. மலிவு விளம்பரத்திற்காகவும், தனது கூட்டணி கட்சியின் தலைவர் ஸ்டாலினின் கண்பார்வைக்காகவும், மத்திய அரசை எதிர்த்து அரசியல் செய்கிறார் காங்கிரஸ் நாராயணசாமி.
அரசின் தவறுகளையும், முறைகேடுகளையும், மக்கள் விரோத திட்டங்களையும் சுட்டிக்காட்டும் கடமையும், பொறுப்பும் எதிர்கட்சிகளுக்கு உண்டு. அந்த வகையில் அனுபவமிக்க முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் தனது குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் எடுத்துக்கூற முன்வர வேண்டும். பொய் குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்றார்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play