ஸ்ரீரங்கம் கோயில் தைத்தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் தை தேரோட்டம் திங்கள்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் தைத்தேர் திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 4ம் திருநாளான 5 -ஆம் தேதி தங்க கருடவாகனத்தில் நம்பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக உத்தர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழாவின் 8ஆம் நாளான நேற்று மாலை தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு உத்தர வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளுளினார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் அதிகாலை 4.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு அதிகாலை 5 மணிக்கு வந்தார். காலை 5 மணிமுதல் காலை 5.45 மணிவரை ரத ரோஹணம்(மகர லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெற்றது.
இனி விரல் நுனியில் செய்திகள்! அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடுதிரை வசதி
பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6.15 மணிக்கு பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு உத்தர வீதிகளில் வழியாக நிலையை வந்தடைந்தது. பின்னர் பக்தர்கள் தேரின் முன் தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி பெருமாளை தரிசனம் செய்தனர்.
நாளை (பிப். 11ஆம் தேதி) சப்தாவா்ணம் நிகழ்ச்சியும், நிறைவு நாளான பிப். 12 இல் நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா் செய்கின்றனா்.