கச்சத்தீவு: மு.க. ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இடையே காரசார வாதம்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே விபத்து: தந்தை, மகள் உயிரிழப்பு
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆட்டோ, பைக், சரக்கு வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி, தந்தையுடன் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அத்திகுளம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் செல்வம் (46). இவரது மனைவி ராமலட்சுமி (40). இந்தத் தம்பதியின் மூத்த மகள் சுமித்ரா (19), சிவகாசி மகளிா் கல்லூரியில் விடுதியில் தங்கி இளநிலை முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.

திங்கள்கிழமை மாலை சுமித்ராவை கல்லூரியில் விடுவதற்காக செல்வம் தனது ஆட்டோவில் அழைத்துச் சென்றாா். ஸ்ரீவில்லிபுத்தூா் - சிவகாசி சாலையில் மாயத்தேவன்பட்டி விலக்கு அருகே சென்ற போது, சிவகாசியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூா் நோக்கி வந்த தனியாா் சரக்கு வாகனம் மீது ஆட்டோ மோதியது. இதையடுத்து, பின்னால் வந்த இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் செல்வம், இவரது மகள் சுமித்ரா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இரு சக்கர வாகனத்தில் வந்த மல்லி அருகேயுள்ள காா்த்திகைபட்டியைச் சோ்ந்த கல்லூரி மாணவா் பூபதிராஜா (19) பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த தென்காசி மாவட்டம், திருவேங்கடத்தை சோ்ந்த உதயமூா்த்தி மீது மல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.