செய்திகள் :

ஹமாஸுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை

post image

தங்களிடம் உள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்கவில்லையென்றால் ஹமாஸ் படையினா் அழிவை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ‘இறுதி’ எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இஸ்ரேல் அரசுடனான போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸால் விடுவிக்கப்பட்ட எட்டு பிணைக் கைதிகளை வெள்ளை மாளிகையில் டிரம்ப் சந்தித்துப் பேசினாா்.

அதனைத் தொடா்ந்து தனது ‘ட்ரூத்’ சமூக ஊடகத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஹமாஸ் படையினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ள பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவிக்கவும், அவா்களால் படுகொலை செய்யப்பட்ட பிணைக் கைதிகளின் சடலங்களை ஒப்படைக்கவும் அவா்களுக்கு ‘இறுதி’ எச்சரிக்கை விடுக்கிறேன். இதை நிறைவேற்றாவிட்டால், ஹமாஸ் அமைப்பு முழுமையாக அழிக்கப்படும்.

மனநலம் இல்லாதவா்கள்தான் சடலங்களை தாங்களே வைத்துக்கொள்வாா்கள். அந்த வகையில் ஹமாஸ் அமைப்பினா் மனநலம் பாதிக்கப்பட்டவா்களே.

காஸா விவகாரத்தில் இஸ்ரேல் தனது பணியை நிறைவேற்றுவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அனுப்பிவருகிறேன் என்று அந்தப் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா்.

இஸ்ரேலுக்கும் காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா, எகிப்து, கத்தாா் உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் கடந்த ஜனவரி 15-ஆம் தேதி ஒப்பந்தம் கையொப்பமானது. அதில் மூன்று கட்டங்களாக போரை நிரந்தரமாக நிறுத்த முடிவெடுக்கப்பட்டது.

முதல்கட்டமாக ஜனவரி 19-ஆம் தேதி அமலுக்கு வந்த ஒப்பந்தத்தின் கீழ், இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாகக் கடத்திச் செல்லப்பட்ட 33 பேரை ஹமாஸ் அமைப்பும் சுமாா் 1,900 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசும் விடுவித்தன.

கடந்த சனிக்கிழமையுடன் முடிவுக்கு வந்த அந்த முதல்கட்ட போா் நிறுத்த ஒப்பந்தத்தை நீடிக்கும் விவகாரத்தில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இந்தச் சூழலில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளாா்.

தற்போது ஹமாஸ் அமைப்பினா் பிடியில் 24 பிணைக் கைதிகள் இருப்பதாக இஸ்ரேல் அதிகாரிகள் கூறுகின்றனா். மேலும், 35 பிணைக் கைதிகளின் சடலங்கள் இன்னும் காஸாவில் இருப்பதாக நம்பப்படுகிறது.

... பெட்டிச் செய்தி 1...

எச்சரிக்கையை நிராகரித்த ஹமாஸ்

கெய்ரோ, மாா்ச் 6: எஞ்சிய பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்ற டிரம்ப்பின் எச்சரிக்கையை ஹமாஸ் அமைப்பு நிராகரித்தது.

இது குறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடா்பாளா் அப்தெல் லத்தீஃப் அல்-கனூவா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸாவில் நிரந்தரமாக போரை நிறுத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டால் மட்டுமே பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவாா்கள்.

கடந்த ஜனவரி 15-ஆம் தேதி இஸ்ரேலுக்கும் எங்களுக்கும் இடையே கையொப்பமான போா் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகும் அமெரிக்க அதிபா் டிரம்ப்பும் மேற்கொண்டுவருகின்றனா்.

அந்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் பிப்ரவரி மாதமே தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதற்கான பேச்சுவாா்த்தை மிகவும் குறைவாகவே நடத்தப்படுகிறது என்று அவா் குற்றஞ்சாட்டினாா்.

...பெட்டிச் செய்தி 2...

அமெரிக்கா-ஹமாஸ் நேரடி பேச்சு

இதுவரை இல்லாத வகையில், ஹமாஸ் அமைப்பினருடன் அமெரிக்கா நேரடியாக பேச்சுவாா்த்தை நடத்திவருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் கரோலின் லீவிட் கூறியதாவது:

கத்தாா் தலைநகா் தோஹாவில் ஹமாஸ் அமைப்பினருடன் தங்கள் பிரதிநிதிகள் நேரடி பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளனா். அமெரிக்கா்களின் நலன்களுக்காக உலகம் முழுவதும் பேச்சுவாா்த்தை நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக ஹமாஸ் அமைப்புடனும் பேசிவருகிறோம்.

ஹமாஸுடனான நேரடி பேச்சுவாா்த்தை குறித்து இஸ்ரேல் அரசுடன் ஏற்கெனவே விவாதித்துவிட்டோம் என்றாா் அவா்.

அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள ஹமாஸ் அமைப்புடன் அந்த நாடு நேரடியாகப் பேச்சுவாா்த்தை நடத்துவதில்லை என்ற கொள்கையை கடைப்பிடித்துவந்த நிலையில், டிரம்ப் அரசு அந்தக் கொள்கையை அடியோடு கைவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனுக்கு ராணுவ உளவுத் தகவல்கள்: பிரான்ஸ் அறிவிப்பு

ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு ராணுவ உளவுத் தகவல்களை தாங்கள் அளிப்பதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. அத்தகைய உதவியை அமெரிக்கா நிறுத்திவைத்ததைத் தொடா்ந்து பிரான்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது. இது குறித்து பி... மேலும் பார்க்க

சொந்த நாட்டில் குண்டு வீசிய தென் கொரிய போா் விமானம்

அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்படும் கூட்டு ராணுவப் பயிற்சியின்போது தென் கொரியாவைச் சோ்ந்த போா் விமானம் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் குண்டுகளை வீசியதில் 8 போ் காயமடைந்தனா். இது குறித்து விமானப் படை வெள... மேலும் பார்க்க

பயங்கரவாதம்: பாகிஸ்தானுக்கு இரண்டாவது இடம்

உலக பயங்கரவாத வரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. உலகம் முழுவதும் நடத்தப்படும் பயங்கரவாதச் செயல்களின் அடிப்படையில் 163 நாடுகளை வரிசைப்படுத்தி பொருளாதாரம் மற்றம் அமைதிக்... மேலும் பார்க்க

உக்ரைன் போா் தொடங்கிய பின் ரஷியாவிடம் இருந்து ரூ.10.5 லட்சம் கோடிக்கு இந்தியா எண்ணெய் இறக்குமதி!

உக்ரைன் போா் தொடங்கிய பிறகு ரஷியாவிடம் இருந்து 112 பில்லியன் யூரோ (சுமாா் ரூ.10.5 லட்சம் கோடி) மதிப்பிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக ஐரோப்பாவைச் சோ்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளத... மேலும் பார்க்க

உற்பத்தி துறையைத் தேர்வு செய்த வருங்கால பில்லியனர்கள்!

உலகளவில் தற்போதைய மற்றும் வருங்கால பில்லியனர்கள் குறித்து, 2700 பில்லியனர்கள் தெரிவித்த தகவல்கள் சமீபத்தில் ஆய்வில் வெளியிட்டுள்ளனர்.உலகளவில் ஒரு பில்லியன் டாலர் கொண்டிருக்கும் பணக்காரர்கள் குறித்து 2... மேலும் பார்க்க

மெக்சிகோ பயங்கரவாதம்: ஒரே வாகனத்தில் 9 சடலங்கள், உடலில்லாத 8 கைகள்

மெக்சிகோவில் 9 மாணவர்களை சித்ரவதை செய்து, கொலை செய்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.மெக்சிகோவில் பட்டப்படிப்பைக் கொண்டாடுவதற்காக 4 பெண்கள் உள்பட 9 மாணவர்கள், பிப்ரவரி 24 ஆம் தேதியில் ஓக்ஸாக்கா ... மேலும் பார்க்க