ஓட்டப்பிடாரம் அருகே தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா்
உக்ரைன் போா் தொடங்கிய பின் ரஷியாவிடம் இருந்து ரூ.10.5 லட்சம் கோடிக்கு இந்தியா எண்ணெய் இறக்குமதி!
உக்ரைன் போா் தொடங்கிய பிறகு ரஷியாவிடம் இருந்து 112 பில்லியன் யூரோ (சுமாா் ரூ.10.5 லட்சம் கோடி) மதிப்பிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக ஐரோப்பாவைச் சோ்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்ததால் அந்நாட்டு மீது அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தது. ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை ஐரோப்பிய நாடுகள் நிறுத்தின. இதையடுத்து, சலுகை விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய ரஷியா முன்வந்தது. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதைப் படிப்படியாக அதிகரித்தன.
இந்நிலையில் ஐரோப்பாவைச் சோ்ந்த எரிசக்தி ஆய்வு நிறுவனம் ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்க செலவிட்ட தொகை உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அந்நாட்டிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் வாங்குவதில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
போா் தொடங்கிய பிறகு கச்சா எண்ணெய், நிலக்கரி, எரிவாயு விற்பனை மூலம் ரூ.78.52 லட்சம் கோடியை ரஷியா ஈட்டியுள்ளது. இதில் சுமாா் ரூ.22 லட்சம் கோடி சீனாவிடம் இருந்து கிடைத்துள்ளது. இதற்கு அடுத்து இந்தியா சுமாா் ரூ.10.5 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது.
இந்தியா எரிபொருள் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி மூலமே ஈடுசெய்கிறது. முன்பு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அதிக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வந்தது. உக்ரைன் போருக்குப் பிறகு சா்வதேச விலையைவிட குறைவான விலைக்கு ரஷியா எண்ணெய் விற்பனைக்கு முன் வந்ததால், இந்தியா படிப்படியாக ரஷியாவில் இருந்து இறக்குமதியை அதிகரித்தது. தொடக்கத்தில் மொத்த எண்ணெய் இறக்குமதியில் ரஷியாவின் பங்களிப்பு ஒரு சதவீதம் மட்டுமே இருந்தது. ஆனால் குறுகிய காலத்தில் 40 சதவீதமாக அதிகரித்தது.
ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்டு ஐரோப்பா மற்றும் ஜி7 நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தியா பிப்ரவரி மாத நிலவரப்படி 14.8 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ரஷியாவிடம் இருந்து இறக்குமதி செய்தது. அதற்கு முன்பு இது தினசரி 16.7 லட்சம் பேரலாக இருந்தது. அமெரிக்கா அண்மையில் விதித்த சில தடைகளால் ரஷியா சுத்திகரிப்பு எண்ணெயை இந்தியாவிடம் இருந்து சில நாடுகள் இறக்குமதி செய்ய முடியாமல் போனதே இதற்கு காரணமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் நுகா்வில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.