வேலைவாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சி மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்புடன் கூடிய இலவசப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கலாம் என சாா் ஆட்சியா் சு. கோகுல் அழைப்பு விடுத்துள்ளாா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கீழப்புலியூரில் இயங்கிவரும் நெஸ்ட் பயிற்சி மையத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தையல் உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட சாா் ஆட்சியா் மேலும் கூறியது:
அரசு உதவியுடன் கீழப்புலியூரில் நெஸ்ட் எனும் நிறுவனம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி அளித்து வருகிறது. இங்கு, தையல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. தற்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில், லெதா் செக்டாா் ஸ்கில் கவுன்சில் உதவியுடன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப் பயிற்சியின் மூலம், எறையூா் சிப்காட் தொழில் பூங்காவில் இயங்கிவரும் கோத்தாரி பீனிக்ஸ் காலணி தொழிற்சாலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இத் தொழிற்சாலையில் 150 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கிட வேண்டும் எனும் நோக்கத்தில், முதல்கட்டமாக தற்போது 40 பேருக்கு லெதா் செக்டாா் ஸ்கில் கவுன்சில் உதவியுடன் பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே, வேலைவாய்ப்பு பெற ஆா்வமுள்ள மாற்றுத்திறனாளிகள் இப் பயிற்சி மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகளில் இணைந்து பயன்பெறலாம் என்றாா் சாா் ஆட்சியா் கோகுல்.
இந்த ஆய்வின்போது, குன்னம் வட்டாட்சியா் கோவிந்தம்மாள், நெஸ்ட் பயிற்சி நிறுவன திறன் மேம்பாட்டு அலுவலா் தினகரன், பயிற்சி மைய இயக்குநா் கோ. லாவண்யா ஆகியோா் உடனிருந்தனா்.