மலையாளப்பட்டி அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மலையாளப்பட்டியில் உள்ள அரசு பழங்குடியினா் நல உண்டு உறைவிட உயா்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா, நூற்றாண்டு விழா, தமிழ்க் கூடல் விழா ஆகிய முப்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் தனக்கொடி தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் விஜயா முன்னிலை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற, லாடபுரம் அரசு ஆதி திராவிடா் நல உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் தமிழ்ச் செம்மல் முனைவா் த. மாயக்கிருட்டிணன், இலக்கியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குச் சான்றிதழ், பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினாா்.
தொடா்ந்து, மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில், ஆசிரியா்கள் பானுப்பிரியா, ராமசாமி, உஷாராணி, அருண்மொழி மற்றும் பழங்குடியினா் நல விளையாட்டுத் துறை அமைப்பு பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.
முன்னதாக, பள்ளி உதவி ஆசிரியா் அன்பழகன் வரவேற்றாா். நிறைவாக, பட்டதாரி ஆசிரியா் செங்குட்டுவன் நன்றி கூறினாா்.