தொகுதி மறுசீரமைப்பு: நவீன் பட்நாயக்குடன் திமுக நிர்வாகிகள் சந்திப்பு!
தென்காசி: மர்ம உறுப்பை அறுத்து திருநங்கை கொலை; திருநங்கைகள் 2 பேர் கைது; நடந்தது என்ன?
தென்காசி மாவட்டத்தில், பெண்ணாக மாறுவதற்காக மர்ம உறுப்பைக் கத்தியால் அறுத்ததில் அதிக ரத்தப்போக்குக் காரணமாகத் திருநங்கை ஒருவர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக 2 திருநங்கைகள் கைது செய்யப்பட்டனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம்.
அப்போது நம்மிடம் பேசியவர்கள், "ஆலங்குளம் அருகே பரம்பு மாடி தெருவைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. திருநங்கையான இவருடன், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அரசர்குளத்தைச் சேர்ந்த சிவாஜி கணேசன் என்ற சைலு என்பவர் கடந்த 2 வாரங்களாகத் தங்கி இருந்தார். இவர் ஆணாக இருந்து திருநங்கையாக மாறியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மகாலட்சுமியின் வீட்டில் சைலு திடீரென்று மர்ம உறுப்பு அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடியவாறு கிடந்தார்.

உடனே அவரை மகாலட்சுமி உள்ளிட்ட திருநங்கைகள் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சைலு இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து கடையம் போலீரஸூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ஆய்வாளர் மேரி ஜெமீதா மற்றும் போலீஸார், சைலுவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, சைலு பெண்ணாக மாறுவதற்காகத் தனது மர்ம உறுப்பைத் தானே அறுத்து அறுவை சிகிச்சை செய்து கொள்ள முயற்சி செய்தபோது இறந்துவிட்டதாகத் திருநங்கைகள் தெரிவித்தனர். எனினும் உடன் தங்கியிருந்த திருநங்கைகளின் பேச்சில் சந்தேகம் அடைந்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸாரின் இந்த விசாரணையில், சைலு பெண்ணாக மாறுவதற்காக அவரின் மர்ம உறுப்பை மகாலட்சுமியும், மற்றொரு திருநங்கையான மதுமிதா என்பவரும் சேர்ந்து கத்தியால் அறுத்ததும், இதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதில் அவர் இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கவனக்குறைவாகச் செயல்பட்டது, குற்றத்தை மறைத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து திருநங்கைகள் மகாலட்சுமி, மதுமிதா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்." என்றனர்.
கைதான 2 பேரும், ஏற்கனவே பெண்ணாக மாற முயன்ற பலருக்கு மர்ம உறுப்பை அறுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
