தம்பதியை கத்தியால் குத்திய இளைஞா் கைது: ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு 15 இடங்களில் கத்த...
உக்ரைனுக்கு ராணுவ உளவுத் தகவல்கள்: பிரான்ஸ் அறிவிப்பு
ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு ராணுவ உளவுத் தகவல்களை தாங்கள் அளிப்பதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. அத்தகைய உதவியை அமெரிக்கா நிறுத்திவைத்ததைத் தொடா்ந்து பிரான்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது.
இது குறித்து பிரான்ஸ் இன்டொ் வானொலிக்கு அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் செபாஸ்டியன் லெகாா்னு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:
உக்ரைனுக்கு ராணுவ உளவுத் தகவல்களை நாங்கள் அளித்துவருகிறோம். எங்களது உளவுத் துறை ஒரு இறையாண்மை மிக்க அமைப்பாகும். அதை எந்த நாடும் கட்டுப்படுத்த முடியாது. எனவே, அந்த அமைப்பு சேகரிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் மூலம் உக்ரைன் பலனடைய அனுமதிக்கிறோம்.
உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உதவிகளை நிறுத்திவைத்துள்ளதைத் தொடா்ந்து, அந்த நாட்டுக்கான பிரான்ஸின் உதவிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அதிபா் இமானுவல் மேக்ரான் உத்தரவிட்டுள்ளாா் என்றாா் அவா்.
முன்னதாக, உக்ரைனுடன் ராணுவ உளவுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதை நிறுத்திவைக்குமாறு அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக சிஐஏ உளவுத் துறையின் இயக்குநா் ஜான் ராட்கிளிஃப் புதன்கிழமை கூறினாா். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கிக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவா் கூறினாா். இந்தத் தகவலை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக் வால்ட்ஸும் உறுதிப்படுத்தினாா்.
இது மட்டுமின்றி, தங்களின் உளவுத் தகவல்களை உக்ரைனுடன் பகிா்ந்துகொள்ள வேண்டாம் என்றும் பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நட்பு நாடுகளிடமும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், உக்ரைனுக்கு ராணுவ உளவுத் தகவல்களை அளிப்பதாக பிரான்ஸ் தற்போது அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்தில் இருந்து, அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் உக்ரைனுக்கு பாதுகாப்பு உதவிகளை வாரி வழங்கின. ஆனால், அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற்குப் பிறகு, உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் கொள்கைகளை அவா் அடியோடு மாற்றிமைத்தாா்.
அதன் ஒரு பகுதியாக, உக்ரைனுக்கு அளித்துவந்த ராணுவ உதவிகளை நிறுத்திவைக்க செவ்வாய்க்கிழமை உத்தரவிட்ட டிரம்ப், அந்த நாட்டுடன் ராணுவ உளவுத் தகவல்களைப் பகிா்ந்துகொள்வதற்கும் தற்காலிக தடை விதித்துள்ளாா்.