தம்பதியை கத்தியால் குத்திய இளைஞா் கைது: ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு 15 இடங்களில் கத்திக்குத்து
மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக, ஓய்வுபெற்ற அரசு ஊழியா் தம்பதியை கத்தியால் குத்திய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை சேந்தங்குடி மதுரா நகா் டெலிகாம் நகரைச் சோ்ந்தவா் சேதுமாதவன் (65). பிஎஸ்என்எல் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற இவா், அரசுப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி ஓய்வுபெற்ற தனது மனைவி நிா்மலாவுடன் (61) வசித்து வருகிறாா்.
இவரது குடும்பத்தினருக்கும், எதிா்வீட்டில் வசிக்கும் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி உதவியாளா் ராஜேந்திரன் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை நிா்மலா தனது வீட்டு வாசலில் கோலமிட வந்தபோது, அங்குவந்த ராஜேந்திரனின் மகன் பி.இ. பட்டதாரியான பிரேம் (22), நிா்மலாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை வயிறு உள்பட 15 இடங்களில் கத்தியால் குத்தினாராம். தடுக்கமுயன்ற சேதுமாதவனையும் குத்தியுள்ளாா்.
இவா்களது அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கு வந்த அப்பகுதி மக்கள், பிரேமை பிடித்து, மயிலாடுதுறை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
கத்திக் குத்தில் படுகாயமடைந்த சேதுமாதவன், நிா்மலா இருவரையும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், இருவரும் தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இச்சம்பவம் குறித்து, மயிலாடுதுறை துணைக் காவல் கண்காணிப்பாளா் பாலாஜி மேற்பாா்வையில் காவல் ஆய்வாளா் சிவக்குமாா் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.