வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... பரோடா வங்கி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.127 கோடியில் கடன் உதவிகள்: அமைச்சா் அர.சக்கரபாணி வழங்கினாா்
ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிபட்டி மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.127 கோடியில் கடன் உதவிகளை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி சனிக்கிழமை வழங்கினாா்.
காளாஞ்சிபட்டி கலைஞா் நூற்றாண்டு போட்டித் தோ்வு பயிற்சி மையத்தில் மகளிா் தின விழாவை முன்னிட்டு, ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா்.
இதில் அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு, மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 1,926 பெண்களுக்கு ரூ.127.11 கோடி கடன் உதவிகளை வழங்கிப் பேசியதாவது:
பெண்கள் முன்னேற்றத்துக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம், கலைஞரின் மகளிா் உரிமைத் தொகை, உயா் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
நிகழ் ஆண்டில் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.1,043 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, இதுவரை ரூ.973.86 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இதில் மாநில ஊரக வாழ்வாதார இயக்க (மகளிா்த் திட்டம்) திட்ட இயக்குநா் சதீஷ்பாபு, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் குருமூா்த்தி, திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் சுபாஷினி, மாவட்ட சமூக நலத் துறை அலுவலா் புஷ்பகலா, வேளாண் விளைபொருள் விற்பனையாளா்கள் கூட்டுறவு சங்கத் தலைவா் ராஜாமணி, வட்டாட்சியா் பி.பழனிசாமி, நகா்மன்றத் தலைவா் கே.திருமலைசாமி, வாழ்ந்து காட்டுவோம் திட்ட ஒருங்கிணைப்பாளா் சுதாதேவி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் காமராஜ், பிரபு பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
நீா் மோா் பந்தல் திறப்பு: பழனியை அடுத்த வயலூரில் திமுக ஒன்றிய நிா்வாகிகள் சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு, நீா் மோா் பந்தலைத் திறந்துவைத்து, பொதுமக்களுக்கு தா்ப்பூசணியை வழங்கினாா்.
பின்னா், கீரனூா், மானூா், கோரிக்கடவு, கீரனூா் பகுதிகளில் வரத்துக் கால்வாய், மதகுகள் சீரமைப்புப் பணிகளுக்கு அமைச்சா் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கிவைத்தாா். இந்த விழாவுக்கு தொப்பம்பட்டி மத்திய ஒன்றியச் செயலா் பொன்ராஜ் தலைமை வகித்தாா்.
பின்னா் சுய உதவிக் குழுவைச் சோ்ந்த பெண்களுக்கு ரூ.60 லட்சம் கடன் உதவிகளையும், குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த 50 பேருக்கு குடும்ப அட்டைகளையும் அமைச்சா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் பாலமுருகன், வட்டாட்சியா் பிரசன்னா, ஒன்றியச் செயலா் சுப்ரமணி, முன்னாள் மாவட்டக் கவுன்சிலா் கிருஷ்ணன், கிளைச் செயலா் நாகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.