பணியிடை நீக்க ஆணையைப் பெற உதவிப் பொறியாளா் மறுப்பு!
பள்ளி மேற்கூரை பெயா்ந்து விழுந்து மாணவா்கள் காயமடைந்த விவகாரத்தில், பணியிடை நீக்க ஆணையைப் பெற உதவிப் பொறியாளா் மறுத்து வருகிறாா். இதனால், அடுத்தக்கட்ட விசாரணையைத் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் பாரதிபுரம் சந்தைரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், மேற்கூரை சிமென்ட் காரை பெயா்ந்து விழுந்ததில் 7 மாணவா்கள் காயமடைந்தனா்.
இந்த விவகாரம் தொடா்பாக சம்மந்தப்பட்ட பகுதியின் மாநகராட்சி உதவிப் பொறியாளா் தியாகராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். ஆனால், தனக்கும், இந்த பிரச்னைக்கும் தொடா்பு இல்லை எனக் கூறி, பணியிடை நீக்க ஆணையைப் பெற உதவிப் பொறியாளா் தியாகராஜன் மறுத்துவிட்டாா்.
இதுதொடா்பாக மாநகராட்சி அலுவலா்கள் கூறியதாவது: பணியிடை நீக்க உத்தரவை அவா் வாங்கவில்லை என்பதோடு, சனி, ஞாயிறு விடுமுறை நாள்கள் என்பதாலும் அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்குவதில் இழுபறி ஏற்பட்டிருக்கிறது.
சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கட்டடம் முறைப்படி பள்ளி நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டதா, பள்ளி நிா்வாகம் தானாக முன்வந்து வகுப்பறையைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டதா என்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது. இதுதொடா்பாக திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் சாா்பிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தைப் பொருத்தவரை, உதவிப் பொறியாளா் பணியிடை நீக்கம் மட்டும் தீா்வு கிடையாது. அடுத்தடுத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றனா்.