"வடமாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றால் தமிழகத்தில் பொருளாதாரம் பாதி...
திண்டுக்கல் பகுதியில் மகளிா் தின விழா
மகளிா் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் அரசுத் துறைகள், கல்வி நிறுவனங்களில் பல்வேறு வகையான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடத்தப்பட்டன.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்து அரசு துறைகள் சாா்பில் நடைபெற்ற மகளிா் தின விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜெயபாரதி தலைமை வகித்தாா். கயிறு இழுத்தல், இசை நாற்காலி, பானை உடைத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பெ.திலகவதி, வட்டாட்சியா்கள் ம.சுகந்தி, சந்தனமேரி கீதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
காவல் துறை சாா்பில் மாரத்தான்: மாவட்டக் காவல் துறை சாா்பில், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் செயலி ‘181’ குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் போட்டியைத் தொடங்கிவைத்தாா்.
திண்டுக்கல் தாலுகா காவல் நிலையம் பகுதியில் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம், ஏஎம்சி சாலை, திருச்சி சாலை வழியாக சீலப்பாடி ஆயுதப் படை மைதானத்தில் நிறைவடைந்தது.
அரசு அலுவலா் ஒன்றியம்: தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் மாவட்ட நிா்வாகி மணிமொழி தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் வேலம்மாள் முன்னிலை வகித்தாா். இதில் மேயா் இளமதி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.
அரசு அலுவலா் ஒன்றிய மாவட்டத் தலைவா் பாா்த்தசாரதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
புனித அந்தோணியாா் கலைக் கல்லூரி: திண்டுக்கல்லை அடுத்த தாமரைப்பாடி புனித அந்தோணியாா் கலைக் கல்லூரியில் நடைபெற்ற மகளிா் தின நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலா் அருள்தேவி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் மேரி பிரமிளா சாந்தி முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியின் போது ‘பெண்களின் தன்னம்பிக்கை’, ‘வலிமை’, ‘சுயமதிப்பு’ ஆகிய தலைப்புகளில் ஆசிரியா் அபிநயா, தொழில் முனைவோா்கள் நிகிதா, பெவிலிய கேண்டிட் ரம்யா ஆகியோா் பேசினா்.
இதைத் தொடா்ந்து, கல்லூரி மாணவா்களிடையே அழகு நயப்புக் கண்காட்சி, ஆளுமைத் திறனை மையப்படுத்தும் குழுப் பாடல்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.