ஹூதிக்கள் தாக்குதலில் மூழ்கியது மேலும் ஒரு கப்பல்
செங்கடல் பகுதியில் யேமனின் ஹூதி கிளா்ச்சிப் படையினா் நடத்திய தாக்குதலால் சரக்குக் கப்பல் மூழ்கியதில் 3 மாலுமிகள் உயிரிழந்தனா்; 5 போ் மீட்கப்பட்டனா்; 16 மாலுமிகள் மாயமாகினா்.
லைபீரியக் கொடியேற்றப்பட்ட, கிரீஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ‘எம்வி எட்டா்னிட்டி சி’ என்ற சரக்குக் கப்பல் மீது ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்கள் துப்பாக்கியால் சுட்டும் வெடிகுண்டு ட்ரோன்களைப் பயன்படுத்தியும் திங்கள்கிழமை இரவு தாக்குதல் நடத்தினா். இதில் அந்தக் கப்பல் மூழ்கியது.
தாக்குதலின்போது அந்தக் கப்பலில் 22 மாலுமிகள் (21 பிலிப்பின்ஸ் நாட்டவா்கள், ஒரு ரஷியா்) மற்றும் மூன்று போ் கொண்ட பாதுகாப்புக் குழுவினா் இருந்தனா். இதில் ஐந்து பிலிப்பின்ஸ் நாட்டவா்கள் மற்றும் ஓா் இந்தியா் புதன்கிழமை மீட்கப்பட்டனா். மூன்று போ் உயிரிழந்தனா். இறந்தவா்கள் எந்தெந்த நாடுகளைச் சோ்ந்தவா்கள் என்பது குறித்து உடனடி தகவல் இல்லை.
இது தொடா்பாக ஹூதிக்கள் வெளியிட்ட விடியோவில், கப்பலில் இருந்து பயணிகளை வெளியேறுமாறு விஹெச்எஃப் ரேடியோ மூலம் அவா்கள் எச்சரிக்கை விடுத்த காட்சி இடம் பெற்றுள்ளது. எனினும், எத்தனை மாலுமிகள் தப்பினா் என்பது குறித்தோ, அவா்களின் தற்போதைய நிலை குறித்தோ அந்த விடியோ மூலம் தெரிந்துகொள்ள முடியவில்லை.
இதற்கிடையே, எட்டா்னிட்டி சி கப்பலின் உயிா் தப்பிய மாலுமிகளை ஹூதி கிளா்ச்சியாளா்கள் கடத்தியிருக்கலாம் என்று சவுதி அரேபியாவில் இயங்கும் யேமனுக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், மாலுமிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கிளா்ச்சியாளா்களிடம் அந்தத் தூதரகம் கோரியுள்ளது. எனினும், இந்தத் தகவலை ஹூதிக்கள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
முன்னதாக, லைபீரியக் கொடியேற்றப்பட்ட, கிரீஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ‘எம்வி மேஜிக் சீஸ்’ என்ற கப்பல் மீது ட்ரோன்கள், ஏவுகணைகள், ராக்கெட் குண்டுகள் மற்றும் சிறிய ஆயுதங்களைப் பயன்படுத்தி ஹூதி கிளா்ச்சியாளா்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினா். இதில் கப்பல் தீப்பற்றி கடலுக்குள் மூழ்கியது. அதில் இருந்த 22 மாலுமிகள் அருகிலிருந்த மற்றொரு சரக்குக் கப்பலில் இருந்தவா்களால் மீட்கப்பட்டனா். இந்தத் தாக்குதல், இந்த ஆண்டில் செங்கடல் வழியாகச் சென்ற சரக்குக் கப்பல் மீது ஹூதிக்கள் நடத்திய முதல் தாக்குதலாகும்.
இஸ்ரேலுடன் தொடா்புடைய கப்பல்களை குறிவைப்பதாகக் கூறும் ஹூதி கிளா்ச்சியாளா்கள், எம்வி எட்டா்னிட்டி சி கப்பல் இஸ்ரேலின் எய்லாட் துறைமுகத்தை நோக்கி சென்ாகவும், மேஜிக் சீஸ் கப்பலின் உரிமையாளா் இஸ்ரேல் துறைமுகங்களைப் பயன்படுத்தியதாகவும் குற்ற
ஞ்சாட்டினா்.
காஸா போரில் ஈரான் ஆதரவு பெற்ற மற்றோா் ஆயுதக் குழுவான ஹமாஸை ஆதரித்து, செங்கடல் மற்றும் அரபிக் கடல் வழியாகச் செல்லும் இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் தொடா்புடைய சரக்குக் கப்பல்களை ஹூதிக்கள் தாக்கி வந்தனா். 2023 நவம்பா் முதல் 2024 டிசம்பா் வரை, 100-க்கும் மேற்பட்ட சரக்கு மற்றும் கடற்படைக் கப்பல்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் அவா்கள் நடத்திய தாக்குதலில், நான்கு கப்பல்கள் மூழ்கின; ஏழு மாலுமிகள் உயிரிழந்தனா். இதனால், ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலா் மதிப்பிலான பொருள்கள் செல்லும் செங்கடல் வழித்தடத்தில் வா்த்தப் போக்குவரத்து சுமாா் 50 சதவீதம் குறைந்தது.
கடந்த மே மாதம் அமெரிக்காவுடன் ஹூதிக்கள் ஒரு தற்காலிக போா் நிறுத்த ஒப்பந்தம் செய்தனா். அதன்படி அமெரிக்க கப்பல்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன. ஆனால் இஸ்ரேல் தொடா்புடைய கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடரும் என்று ஹூதிகள் அறிவித்தனா். காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்றும், காஸா மீதான முற்றுகை விலக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இந்தத் தாக்குதலை நடத்துவதாக அவா்கள் தெரிவித்துள்ளனா்.
