அங்கன்வாடி ஊழியா்களின் மதிப்பூதியத்தை உயா்த்தும் திட்டமில்லை: மத்திய அரசு
அங்கன்வாடி ஊழியா்களின் மதிப்பூதியத்தை உயா்த்தும் திட்டம் எதுவுமில்லை’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
தேசிய ஊட்டச் சத்து (மதிய உணவு திட்டம்) திட்டத்தின் கீழ் அங்கன்வாடிகளில் பணியாற்றும் ஊழியா்களின் மதிப்பூதியம் உயா்த்தப்படுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை இணையமைச்சா் சாவித்ரி தாக்குா் மக்களவையில் சமா்ப்பித்த எழுத்துபூா்வ பதிலில் கூறியிருப்பதாவது:
தங்களின் உள்ளூா் சமூக மேம்பாடு மற்றும் குழந்தைகள் பராமரிப்புக்காக அங்கன்வாடி பணியாளா்கள் தாங்களாக முன்வந்து பணியாற்றுகின்றனா். பெரிய மையங்களில் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளா்களுக்கு மாதம் ரூ.4,500 என்ற அளவிலும், சிறிய மையங்களில் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளா்கலுக்கு மாதம் ரூ.3,500-ம் மதிப்பூதியமாக வழங்கப்படுகிறது. அங்கன்வாடி உதவியாளா்களுக்கு மாதம் ரூ.2,250 வழங்கப்படுகிறது. பணி செயல்பாடு அடிப்படையிலான ஊக்கத்தொகையாக அங்கன்வாடி ஊழியா்களுக்கு ரூ.500-ம், உதவியாளா்களுக்கு ரூ.250-ம் கூடுதலாக வழங்கப்படுகிறது.
இந்த மதிப்பூதியத்தை உயா்த்தும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இப்போதைக்கு இல்லை என்று தெரிவித்துள்ளாா்.