அசாம் சுரங்க விபத்து! 2வது தொழிலாளியின் உடல் மீட்பு!
வடகிழக்கு மாநிலமான அசாமின் டிமா ஹசாவோ மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 9 தொழிலாளிகளில், மற்றொரு தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜன.6 அன்று உம்ராங்சோவின் 3 கிலோ எனும் பகுதியிலுள்ள நிலக்கரி சுரங்கத்தினுள் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது, அதனுள் இருந்த 9 தொழிலாளிகள் சிக்கிக் கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, அன்றிலிருந்து அந்த தொழிலாளிகளை மீட்க இந்திய ராணுவப்படை, கடற்படை, தேசிய மற்றும் மாநில மீட்புப் படையைச் சார்ந்த வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்
இந்நிலையில், கடந்த ஜன.8 அன்று 21 பாரா நீச்சல் வீரர்கள் சுரங்கத்தில் சூழ்ந்துள்ள நீரினுள் நீந்தி சென்றப்போது 85 வது அடி ஆழத்தில் பலியான நேபாளத்தைச் சேர்ந்த கங்கா பகதூர் செஸ்தோ என்ற தொழிலாளியின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
இதையும் படிக்க:பெங்களூரு சிறையில் தீவிரவாத செயல்: 9-ஆவது குற்றவாளி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
அதன் பின்னர், மீதமுள்ள 8 தொழிலாளிகளின் நிலைக்குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்காத நிலையில் அந்த சுரங்கத்தினுள் சூழ்ந்துள்ள நீரை வெளியேற்ற ’கோல் இந்தியா’ சார்பில் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து நிமிடத்திற்கு சுமார் 500 கலோன் அளவிலான தண்ணீரை வெளியேற்றக் கூடிய அதிக அழுத்தம் கொண்ட பம்ப் கொண்டு வரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விபத்து நடந்த 6வது நாளான இன்றும் (ஜன.11) மீட்புப் பணி நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை அந்த சுரங்கத்தின் ஆழத்தில் நீந்தி சென்ற தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினர் மற்றொரு தொழிலாளியின் உடலை மீட்டுள்ளனர். பின்னர், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் டிமா ஹசாவோவை சேர்ந்த லிகென் மகர் (வயது 27) என்பது தெரியவந்தது.
முன்னதாக, அந்த சுரங்கத்தில் சிக்கிய 9 தொழிலாளிகளில் 3 பேரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில் 2 வது நபரது உடல் மீட்டு வெளியே கொண்டுவரப்பட்டுள்ளது.
சுமார், 340 அடி ஆழமுள்ள அந்த சுரங்கத்தில் சூழ்ந்துள்ள நீரை வெளியேற்ற கோல் இந்தியா மற்றும் ஓ.என்.ஜி.சி ஆகிய நிறுவனங்களில் மூலமாக இதற்காகவே பிரத்யேக இயந்திரஙகள் கொண்டுவரப்பட்டு நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகின்றது. தற்போது வரையில் 7 மீட்டர் அளவுக்கு நீர் வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.