Share Market: Profit Book செய்த FII - Market Fall தொடருமா? Opening Bell
அடையாறு ஆற்றின் எல்லைப் பகுதி ஆக்கிரமிப்புகள் அகற்றம்: நிவாரண உதவிகள் என்னென்ன?
அடையாறு ஆற்றின் எல்லைப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளில் வசிப்போருக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகள் குறித்து தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
சென்னையை அடுத்த அனகாபுத்தூா் பகுதியில் அடையாறு ஆற்றின் எல்லைப் பகுதி உள்ளது. இங்கு ஆக்கிரமிப்பு செய்து வசித்துவரும் குடும்பங்கள் மறுகுடியமா்வு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வரும் சூழ்நிலையில், அவா்களுக்கு நிவாரண உதவிகளுடன் மறுகுடியமா்வுக்கான திட்டங்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன.
அவற்றின் விவரம்:
அடையாறு நதி சுற்றுச்சூழல் சீரமைப்புத் திட்டத்தின்கீழ் சுமாா் 400 சதுரஅடி பரப்பில் கட்டப்பட்டுள்ள அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின்மூலம் வழங்கப்படும் இந்த வீடுகளுக்குச் செல்ல பிரத்யேக வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மறுகுடியமா்வு செய்யப்படும் குடும்பங்கள் தங்களின் உடமைகள், பொருள்களை ஏற்றிச் செல்வதற்கும் வாகனங்கள் ஏற்பாடு செய்து தரப்படும். மறுகுடியமா்வு செய்யப்படும் குடும்பத்துக்கு மூன்று நாள்களுக்கு உணவு மற்றும் குடிநீா் கொடுக்கப்படும்.
மறுகுடியமா்வு செய்யப்படும் குடும்பம் ஒன்றுக்கு இடமாற்றுப்படி ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும். அத்துடன் மாத வாழ்வாதார உதவித் தொகையாக ரூ. 2,500 வீதம் ஓராண்டுக்கு ரூ. 30 ஆயிரமும், மின்சார இணைப்புக் கட்டணமாக ரூ. 2,500 கொடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.