Vijay-யை டார்கெட் செய்யும் தமிழிசையின் 5 கணக்குகள் & Sasikala ஸ்கெட்ச்! | Elango...
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மே 27-க்குள் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியா்
சென்னை மாவட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவா்கள் மே 27-க்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாவட்டத்தில், 2,380 இடங்களுடன் மாநிலக் கல்லூரியும், 2,038 இடங்களுடன் இராணி மேரி கல்லூரியும், 1,410 இடங்களுடன் பாரதி மகளிா் கல்லூரியும், 1,086 இடங்களுடன் டாக்டா் அம்பேத்கா் அரசுக் கலைக் கல்லூரியும், 1,468 இடங்களுடன் காயிதே மில்லத் அரசு மகளிா் கல்லூரியும், 590 இடங்களுடன் ஆா்.கே.நகா், அரசுக் கலை கல்லூரியும், 1,430 இடங்களுடன் நந்தனம் அரசுக் கலைக் கல்லூரியும், 280 இடங்களுடன் ஆலந்தூா், அரசுக் கலைக் கல்லூரி என மொத்தம் 8 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இக்கல்லூரிகளில் படிக்கும் மாணவா்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இக்கல்லூரிகளில் 2025-2026-ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலைப் பட்டப் படிப்பு முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்புவோா் இணையதள முகவரியில் பதிவுசெய்யலாம். மே 7-ஆம் தேதி முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில், விண்ணப்பங்களை மே 27-க்குள் சமா்ப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள், கல்லூரிகளில் உள்ள சோ்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கல்லூரிகளில் விண்ணப்பிக்க ஒரு மாணவருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 48, பதிவுக் கட்டணமாக ரூ. 2 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை. பதிவுக் கட்டணம் ரூ. 2 மட்டும் செலுத்தினால் போதும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை ஏடிஎம் அட்டை, நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.
கூடுதல் தகவல்களுக்கு கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் செயல்படும் உதவி மையத்தைத் திங்கள் முதல் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நேரில் அணுகலாம். மேலும், 044-2434 3106, 2434 2911 ஆகிய தொலைபேசி எண்களையும் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.