சென்னையில் 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள்
சென்னையில் 50 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவுள்ளன.
சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், மக்களின் தாகத்தை தணிக்கும் விதமாக முதல்கட்டமாக 50 இடங்களில் திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரத்தை நிறுவ சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டது. இதன்படி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான, கடற்கரை, பேருந்து நிலையம், பூங்கா, பள்ளி, கல்லூரிப் பகுதிகள், மார்க்கெட் பகுதிகள் என மொத்தம் 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம் இயந்திரம் அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி, முதல்கட்டமாக, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர் மார்கெட், சைதாப்பேட்டை மற்றும் கிண்டி பேருந்து நிலையங்கள், சிவன் பூங்கா, அண்ணா நகர் டவர் பூங்கா ஆகிய 40 இடங்களிலுள்ள பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இந்த இயந்திரம் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 இடங்களிலும் இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் பணிகள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இயந்திரம் மூலம் 150 மில்லி லிட்டர் மற்றும் 1 லிட்டர் என்று இரண்டு வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் பெறலாம். பொதுமக்கள் இந்த குடிநீரை பாட்டில்களில் பிடித்து பருகும் வகையில் இந்த இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரத்தின் அருகில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளதுடன், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள தனி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை விரைவில் சென்னை மட்டுமன்றி தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.