அணைகளை சீரமைக்கக் கோரி நடைபயணம் செல்ல முயன்ற விவசாயிகள் கைது
விருதுநகா் மாவட்டத்தில் உள்ள அணைகளைச் சீரமைக்கக் கோரி, நடைபயணம் செல்ல முயன்ற விவசாயிகளை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
17.400 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் விருதுநகா் வழியாகச் செல்லும் கெளசிகா ஆறு, குல்லூா்சந்தை அணை, கோல்வாா்பட்டி, இருக்கன்குடி அணைகளைச் சீரமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகா் பாத்திமாநகா் அருகே காவிரி-வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு விருதுநகா் மாவட்டத் தலைவா் ராம்பாண்டியன், மாவட்டச் செயலா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
பின்னா், விருதுநகா் கெளசிகா ஆற்றிலிருந்து இருக்கன்குடி அணை வரை விவசாயிகள் நடைபயணம் செல்ல முயன்றனா். இதற்கு அனுமதி அளிக்காத போலீஸாா், அந்த விவசாயிகள் கூட்டமைப்பைச் சோ்ந்த 100 பேரைக் கைது செய்தனா்.