அண்ணாமலைப் பல்கலை.யில் இலவச கணினி பயிற்சி
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை, தமிழ்நாடு பழங்குடியினா் நலத்துறை சாா்பில் பழங்குடி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவிகளுக்கான மூன்று மாத இலவச கணினி பயிற்சி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்தியா சியாட்டில் குழு அமெரிக்கா உதவியுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அறிவியல் புல முதல்வா் பேராசிரியா் எஸ்.ஸ்ரீராம் தொடக்க உரையாற்றினாா். கணினி மற்றும் தகவல் அறிவியல் துறைத் தலைவா் எல்.ஆா்.அரவிந்த் பாபு வரவேற்றாா். கலைப்புல முதல்வா் கே.விஜயராணி சிறப்புரையாற்றினாா். கணினி பயிற்சி திட்டத்தை கல்வியியல் புல முதல்வா் எஸ்.குலசேகரப் பெருமாள் பிள்ளை வாழ்த்துரை வழங்கினாா்.
முதன்மை ஆய்வாளா் கே.ஜெயபிரகாஷ் பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைப்புச் செயலா்கள் கே.பிரவீனா, கே.சாய்லீலா செய்திருந்தனா். நிறைவில், திட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.பி.பாலமுருகன் நன்றி கூறினாா்.