ரஷியாவில் புற்றுநோய் தடுப்பு மருந்து தயார்! இலவசமாக வழங்கவும் திட்டம்
`அதிகார போதையில் அமைச்சர்கள்' - திமுகவை எகிறி அடிக்கும் வேல்முருகன்... பின்னணி என்ன?
தி.மு.க எதிர்ப்பை வழக்கத்தைவிட கூர்மைப்படுத்தியிருக்கிறார் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன். இவரது அண்மைகால நடவடிக்கைகள் தி.மு.க கூட்டணியில் தொடர்வாரா என்ற கேள்வியை எழுப்புகிறது. வேல்முருகனின் தடாலடி நடவடிக்கைகளின் பின்னணி குறித்து விசாரித்தோம்.
கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், `நான் கோரிக்கை தான் வைக்க முடியும். அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். துணை முதல்வர் உதயநிதி கடலூர் மாவட்டத்துக்கு வரும்போது, பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட வேண்டுகோள் வைத்தேன். ஆனால் அவர் வந்து பார்வையிடவில்லை.
எம்.எல்.ஏ-வாக தனிப்பட்ட முறையில் எவ்வளவு மக்களுக்கு சொந்தச் செலவில் உதவ முடியும்? பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கி பிச்சை போடுகின்றனரா? மது குடித்து உயிரிழந்தால் ரூ.10 லட்சம் அரசு வழங்குகிறது. அதிகாரிகள் செய்யும் தவறுகள் முதல்வருக்கு தெரிகிறதா? இல்லையா?” என ஆதங்கப்பட்டிருக்கிறார்.
கூடவே, ``கூட்டணி வைக்கும்போது திமுக தலைவர்கள் எனக்குப் பேசுகிறார்கள். வெற்றி பெற்று அமைச்சராகிவிட்ட பிறகு அமைச்சர் பேச மாட்டார். அவர் வீட்டு உதவியாளர்கள் பேசுகிறார்கள். ஏன் அமைச்சர் பேச மாட்டாரா? எங்கிருந்து வருகிறது அதிகார போதை?” என தி.மு.க-வை போட்டுத்தாக்கிவிட்டார்.
இதுகுறித்து நம்மிடம் பேசும் மூத்த அரசியல் பார்வையாளர்கள், ``கூட்டணிக் கட்சி தலைவரென்றாலும்தான் எந்த கோரிக்கைக்கும் அரசு செவிசாய்ப்பதில்லை என்ற வருத்தம் அவரிடம் இருக்கிறது. செய்து தருவதாக சொல்லிவிட்டு அலட்சியப்படுத்தப்படுவதாக வருத்ததில் இருக்கிறார் வேல்முருகன். சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடங்கி தொகுதி பிரச்னை வரை நமது வாய்ஸ் எடுபடவில்லை, வன்னியர்களின் வாக்குகளை தி.மு.க-வுக்கான மடைமாற்றினாலும் வன்னியர்களுக்கான எந்த கோரிக்கையை தி.மு.க கண்டுகொள்வதில்லை என கொதிநிலையில் இருக்கும் அவர், கூட்டணிக் கணக்குகளுக்காக கள்ள மெளனம் சாதிக்க முடியாது. உரிமை கேட்டால் கூட்டணி உடையுமென்றால் அந்த கூட்டணியே வேண்டாம் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார் என்கிறார்கள்.
ஒருபடி மேல் சென்று இப்படி எந்த பிரயோஜனமும் இல்லையென்றால் எதற்கு இந்த பதவி என்பதுவரை சிந்திக்கிறார்” என்றவர்கள் தொடர்ந்து, ``வேல்முருகனின் இந்த துணிச்சலுக்கு அ.தி.மு.க-வின் தொடர் அழைப்புகளும் ஓர் காரணம். தி.மு.க கூட்டணியில் இருந்தாலும் தி.மு.க ஆட்சிமீதான கடும் அதிருப்தியில் இருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கூட்டணிக்கு வந்தால் தமிழ்தேசிய மற்றும் வன்னியர் சமூக வாக்குகளும் கைக்கொடுக்கும் எனக் கருதுகிறது அ.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தல் முதலே அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்திருந்த அ.தி.மு.க-வுக்கு அவர் சட்டமன்ற தேர்தலுக்கு வந்துசேருவார் என்ற நம்பிக்கை துளிர்த்திருக்கிறது’ என்கிறார்கள்.
சட்டமன்ற தேர்தலுக்கு 15 மாதங்கள் இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் களத்தை பரபரப்பாகவே வைத்திருக்கிறது.