சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தி சிறப்பு பூஜை!
அதிபர் வந்து சென்றும் தொடரும் அத்துமீறல்; ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை!
ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் பாக் நீரினைப் பகுதியினை தங்கள் வாழ்வாதாரமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பாரம்பர்யமாக மீன்பிடிக்கும் பகுதிகளுக்குச் செல்லும் இவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் செல்வதும், அவர்களை நீதிமன்றத்தின் மூலம் சிறை வைப்பதும் தொடர்கிறது. மேலும் சிறை பிடிக்கப்படும் மீனவர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் அபராதம் விதிப்பதும், அவர்களின் வாழ்வாதாரமாக உள்ள படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கிறது.
நீண்ட காலமாக தொடரும் இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறல்களுக்கு அங்கு புதிய அரசு பதவியேற்றதால் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என மீனவர்கள் எதிர்பார்த்தனர். ஆனாலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் இலங்கை அதிபர் அனுரகுமார திஸநாயக்கா இந்தியா வந்திருந்தார். பிரதமர் மோடியை அவர் சந்தித்த பின் இருவரும் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது மீனவர் பிரச்சனையினை மனிதாபிமான முறையில் கையாளப்பட வேண்டும் என இந்திய தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இது குறித்து பேசிய இலங்கை அதிபர், இலங்கை மீனவர்ள் சுருக்கு மடி மீன்பிடி முறையால் பாதிக்கப்படுவதாகவும், நீண்ட கால பிரச்சனையான உள்ள இரு நாட்டு மீனவர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் என தெரிவித்து சென்றார்.
ஆனால் இலங்கை அதிபரின் இந்திய வருகைக்கு பின்னரும் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடித்து செல்வது தொடர்கிறது. நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதியில் நேற்று இரவு இவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சிமடத்தை சேர்ந்த அந்தோணி ஆரோன், ராமேஸ்வரத்தை சேர்ந்த பூண்டி ராஜ் ஆகியோரது படகுகளை சுற்றி வளைத்தனர்.
பின்னர் அப்படகுகளில் ஏறிய இலங்கை கடற்படையினர், படகில் இருந்த மீனவர்களை தாக்கியதுடன் இருதயம், ஆரோக்கியதாஸ், அந்தோணியார் அடிமை, முனியாண்டி, பூண்டி ராஜ், அமல்ராஜ், கிருபாகரன் 17 பேரையும், அவர்களது இரண்டு படகுகளையும் சிறைபிடித்து சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் மன்னார் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக கொண்டுசென்றுள்ளனர். நாளை கிருஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம், மீனவர்களின் குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.