`அதிமுக-வில் ஒரே நிலைப்பாடு இல்லை...'- செங்கோட்டையன் குறித்து தங்க தமிழ்ச்செல்வன்
தேனி எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் இன்று மாவட்ட கலெக்டரை சந்தித்து கோடை கால குடிநீர் பிரச்னைகளை தீர்ப்பது தொடர்பாக பேசினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன், ``கோடை காலத்தில் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தடையின்றி குடிநீர், மின்சாரம் தடையின்றி வழங்கப்பட வேண்டும். போடி பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு 18 ஆம் கால்வாய் திட்டத்தின் மூலமாக பாசனத்திற்கும் குடிநீருக்கும் தண்ணீர் வழங்க வேண்டும். இதுகுறித்து கலெக்டரிடம் ஆலோசித்துள்ளேன்"

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ``செங்கோட்டையன் தனியாக டெல்லி செல்கிறார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கிறார். எடப்பாடி பழனிசாமியுடன் சன்டையிடுகிறார். சட்டமன்றத்தில் அதிமுக வெளிநடப்பு செய்தால் செங்கோட்டையன் விவாதத்தில் பங்கேற்கிறார். இவர்கள் செயல்பாட்டை பார்த்தால் அதிமுக வில் ஒரே நிலைப்பாட்டில் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது.
ஒன்றிய அரசு கொண்டு வந்த வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்தை திமுக எதிர்க்கிறது, இது தொடர்பாக நீதிமன்றத்தின் மூலம் இஸ்லாமிய மக்களுக்கு ஒரு நல்ல தீர்வை நாங்கள் கொண்டு வருவோம்.

திமுக அமைச்சர்கள் வீட்டில் தொடர்ந்து அமலாக்க துறை சோதனை நடத்துவது ஒன்றிய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்பது அனைவருக்கும் தெரிந்ததே இதை சட்டப்படி நாங்கள் சந்திப்போம்" என்றார்.