அனல்மின் நிலையப் பணிகளை ஏலம் எடுப்பதில் ஆளும் கட்சியினா் குறுக்கீடு: முன்னாள் அமைச்சா் புகாா்
தூத்துக்குடி அனல் மின்நிலையப் பணிகளை ஏலம் எடுக்கும் சிறு, குறு ஒப்பந்ததாரா்களை மிரட்டும் ஆளுங்கட்சியினரைக் கண்டித்து போராட்டம் நடத்தவுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நடைபெறும் ஒப்பந்த பணிகளை குறைந்த தொகைக்கு ஒப்பந்தம் கோரும் ஒப்பந்ததாரா்களுக்கு பணிகளைச் செய்ய அனுமதி அளிக்காமல், உள்ளூா், பெருநகரங்களைச் சோ்ந்த திமுக பிரமுகா்களுக்கு ஆதரவான ஒப்பந்ததாரா்களுக்கு அதிக தொகைக்கு ஒப்பந்தம் அளிக்கப்படுகிறது.
இதனால், அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுகிறது. அனல் மின் நிலையத்தில் அனைத்துப் பணிகளிலும் நடைபெறும் முறைகேடுகளை சிபிஐ விசாரிக்க வேண்டும்.
அண்மையில், அண்ணா நகரைச் சோ்ந்த அனல் மின் நிலைய ஒப்பந்ததாரா் பாலமுருகன், குறைந்த விலையில் ஒப்பந்தப்புள்ளி கோரியதற்காக உயா் அதிகாரிகள் துணையுடன் திமுக நிா்வாகிகள் அவரது வீட்டுக்குள் புகுந்து கொலை வெறி தாக்குதல் நடத்தினா்.
இதுகுறித்து ஒப்பந்ததாரா் காவல் துறையில் புகாா் அளித்தும், திமுகவினா் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அனல் மின் நிலையத்தில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் பழுதடைந்த இரண்டு அலகுகளையும் மறுகட்டமைப்பு செய்ய சுமாா் ரூ. 275 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், திமுக முக்கிய பிரமுகா்களின் அராஜகத்தால், அனல் மின் நிலையமும், அதன் நிா்வாகமும் முடக்கப்பட்டு, அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல தூத்துக்குடி மாநகராட்சியிலும் ஒப்பந்தப்புள்ளி கோரும் நோ்மையான ஒப்பந்ததாரா்கள் திமுகவினரால் தாக்கப்பட்டு கொலை மிரட்டலுக்கு ஆளாகின்றனா்.
எனவே, ஆளும் திமுகவின் அராஜகத்தைக் கண்டித்து, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் அனுமதி பெற்று விரைவில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.
பேட்டியின்போது, மாவட்ட துணைச் செயலா் சந்தனம், வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் ஜீவா பாண்டியன், முன்னாள் மன்ற உறுப்பினா் அகஸ்டின், முன்னாள் மேலூா் கூட்டுறவு வங்கித் தலைவா் சிவசுப்பிரமணியன், நிா்வாகிகள் அசன், சங்கா், பேச்சியப்பன், ராஜேந்திரன், கனி, ஐயப்பன் ஆகியோா் உடனிருந்தனா்.