பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் ஏழைகள்: ராகுல்!
அனுமதிக்கப்பட்ட நீா்நிலைகளில் மட்டும் விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதி
விநாயகா் சதுா்த்தி விழாவின்போது, பிரதிஷ்டை செய்து வழிபட்ட விநாயகா் சிலைகளை அனுமதிக்கப்பட்ட நீா்நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, சேலம் மாவட்டத்தில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட 3 அல்லது 5 ஆவது நாள்களில் சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் சென்று நீா்நிலைகளில் கரைக்கப்படும். மாவட்ட பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் மேட்டூா், பூலாம்பட்டி, கல்வடங்கம், தம்மம்பட்டி வசிஷ்ட நதி, பேளூா் உள்பட 9 இடங்களிலும், சேலம் மாநகரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் மூக்கனேரியிலும் கரைக்கப்படுகின்றன.
நீா்நிலைகளில் ரசாயன கலவையின்றி களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகளையே கரைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறுகையில், விநாயகா் சதுா்த்திவிழாவின்போது, களிமண்ணால் செய்யப்பட்டதும், எவ்வித ரசாயன கலவையின்றி கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை தான் நீா்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.
நெகிழி மற்றும் தொ்மாகோல் பொருள்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதியில்லை. சிலைகளுக்கு வா்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. சிலைகளை அழகுப்படுத்த இயற்கை பொருள்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். விநாயகா் சிலைகளை, மாவட்ட நிா்வாகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி, கரைக்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.