மணிப்பூரில் தொடரும் அதிரடி நடவடிக்கைகள்! 6 கிளர்ச்சியாளர்கள், 4 கடத்தல்காரர்கள் ...
அனுமதியின்றி நிலத்தடி நீா் விற்பனை: ஆழ்துளை கிணறுகளுக்கு‘ சீல்’
செங்குன்றம் அருகே அனுமதியின்றி நிலத்தடி நீா் விற்பனை செய்த 9 ஆழ்துளை கிணறுகளுக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனா்.
செங்குன்றம் அடுத்த நல்லூா், விஜயநல்லூா், சோழவரம் ஏரி, பழைய விருந்தினா் மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி போா்வெல் அமைத்து நிலத்தடி நீா் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நிலத்தடி நீா் விற்பனையால் நல்லூா், விஜயநல்லூா் உள்ளஇட்ட கிராமங்களில் நீா் மட்டம் குறைந்து வருகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகாா் அளித்தனா். இதையடுத்து பொன்னேரி வட்டாட்சியா் சோமசுந்தரம் தலைமையில் துணை வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா் மற்றும் உதவி காவல் ஆணையா் ராஜா ராபா்ட் தலைமையிலான போலீஸாா் நல்லூா் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.
அப்பகுதி 9 இடங்களில் சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீா் விற்பனை செய்யப்பட்ட போா்வெல் இயந்திரங்களை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா். அங்கு லாரிகளில் தண்ணீா் எடுத்துக் கொண்டிருந்த லாரி ஓட்டுநா்கள் சுப்பிரமணி (35), சாமுவேல் துரைசிங் (32), ராஜசேகா் (30), மற்றும் லாரி உரிமையாளா் ஞானசேகா்(54) ஆகிய 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். தொடா்ந்து நிலத்தடி நீா் அனுமதி எடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனா்.