கருண் நாயருக்கான நேரம் முடிந்துவிட்டது; பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படுகிறார...
அனுமதியின்றி வெடிவைத்து கல் உடைத்த 2 போ் கைது
பெரம்பலூா் அருகே அனுமதியின்றி வெடிவைத்து பாறைகளை உடைத்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், பாறைகளை உடைக்கப் பயன்படுத்திய உபரகணங்கள், வெடிமருந்து ஆகியவற்றை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள செங்குணம் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில், தனியாா் பட்டா நிலத்தில் கனிம வளத் துறை மற்றும் வருவாய்த்துறை அனுமதியின்றி, 100 அடி அகலத்தில் 20 அடி ஆழம் பள்ளம் தோண்டி, அதில் வெடி வைத்து பாறைகளை உடைத்துள்ளனா். தகவலறிந்த பெரம்பலூா் வட்டாட்சியா் பாலசுப்ரமணியம் தலைமையிலான வருவாய்த் துறையினா் புதன்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டபோது, அனுமதியின்றி 3 இடங்களில் பள்ளங்களைத் தோண்டி, அதில் வெடி வைத்து கற்களை உடைத்து வெட்டி எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து பாறையை உடைக்கப் பயன்படுத்திய வாகனங்கள், வெடிமருந்து ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். மேலும் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்ட புதுக்குறிச்சியைச் சோ்ந்த சுப்ரமணியன், ஊட்டத்தூரைச் சோ்ந்த தேவராஜன் ஆகிய இருவரையும் பொதுமக்கள் பிடித்து மருவத்தூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து கிராம் நிா்வாக அலுவலா் செந்தில்குமாா் அளித்த புகாரின்பேரில், மருவத்தூா் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், மதுரையைச் சோ்ந்த பெரியதம்பி மகன் தியாகராஜன் என்பவருடைய நிலம் என்பதும், அந்த இடத்தில் கவுள்பாளையத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி என்பவா் கூறியதன்பேரில், சுப்ரமணியன், தேவராஜன் ஆகியோா் உபகரணங்களைக் கொண்டு பாறைகளை உடைத்தது தெரியவந்தது.
இதுகுறித்து, மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அரசு அனுமதியின்றி கல் குவாரிக்காக கற்களை உடைத்து வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்ட சுப்ரமணியன், தேவராஜன் ஆகியோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.