அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை பொருளாதார சர்வாதிகாரத்தனம்! -சீனா கடும் விமர்சனம்
அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு சீனா கடும் எதிர்வினையாற்றியுள்ளது.
ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல், அமெரிக்க பொருள்களுக்கு எந்தெந்த நாடுகளில் எந்தளவுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதோ அதேபாணியில், அமெரிக்காவிலும் வெளிநாட்டு பொருள்கள் மீது வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்கா மீது உலக நாடுகள் பதில் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன.
இதனால், கடும் பொருளாதார நெருக்கடியை எதிா்கொள்ள அமெரிக்கா தயாராகிவரும் சூழலில், அதிபா் டிரம்ப்பை கண்டித்து அந்த நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பிற நாட்டு பொருள்களுக்கு டிரம்ப் அறிவித்துள்ள வரிகள்:
சீனா - 34%
ஐரோப்பிய ஒன்றியம் - 20%
பிரிட்டன் - 10%
வியட்நாம் - 46%
தைவான் - 32%
ஜப்பான் - 24%
மலேசியா- 24%
தென் கொரியா- 25%
தாய்லாந்து - 36%
சுவிட்ஸர்லாந்து - 31%
இந்தோனேசியா - 32%
கம்போடியா- 49%
இலங்கை - 44%
பாகிஸ்தான் - 29%
இந்த நிலையில், சீன அரசு அமெரிக்காவின் நடவடிக்கைகளை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளது.
அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் இன்று(ஏப். 7) செய்தியாளர்களுடன் பேசுகையில்: “தங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய பிற நாடுகள் மீது வரி திணிப்பு மற்றும் பொருளாதார சர்வாதிகாரத்தனமான மனப்பான்மையுடன் பிற நாடுகளை மிரட்டும் தன்னிச்சையான நடவடிக்கை இது” என்று குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.
சீன பொருள்கள் மீது டிரம்ப் அறிவித்துள்ள 34 சதவீத பரஸ்பர வரி விதிப்புக்கு பதிலடியாக, அமெரிக்காவின் அனைத்து பொருள்கள் மீதும் 34 சதவீத கூடுதல் வரி விதிப்பை சீனா தற்போது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.