அமெரிக்கா டு பஞ்சாப்; காதலனைக் கரம்பிடிக்க தேடிவந்த 71 வயது பெண் கொலை.. தீவிர விசாரணையில் காவல்துறை!
அமெரிக்க குடியுரிமைப் பெற்ற 71 வயது பெண் இந்தியாவுக்கு திருமணம் செய்துகொள்ள வந்த நிலையில், எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ருபிந்தர் கவுர் பாந்தர் (71). இவர் அமெரிக்கா குடியுரிமைப் பெற்று அங்கு வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில், இவருக்கும் பாஞ்சாபிலிருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்த சரஞ்சித் சிங் கிரேவால் 74 என்பவருக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது.
அது காலப்போக்கில் காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்வதாக முடிவு செய்திருக்கின்றனர்.

அதனால் ருபிந்தர் கவுர் பாந்தரை, ஜூலை 20-ம் தேதி சரஞ்சித் சிங் கிரேவால் இந்தியாவுக்கு வரவழைத்திருக்கிறார்.
இதற்கிடையில், இந்தியா வந்த ருபிந்தர் கவுர் பாந்தரை அமெரிக்காவில் வசிக்கும் அவரின் குடும்பத்தினர் தொடர்புகொள்ள முயன்றபோது, அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.
உடனே அவரின் குடும்பத்தினர் இந்திய தூதரகத்தின் மூலம் காவல்துறையில் புகார் அளித்திருக்கின்றனர். அதன் அடிப்படையில் காவல்துறை விசாரணையைத் தொடங்கியது.
அந்தப் பெண் காணாமல் போனது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின்படி லூதியானா காவல்துறை சந்தேக நபர்களின் பெயர்களை பட்டியலிட்டது.
அதில் ஒருவர் சரஞ்சித் சிங் கிரேவால். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அளித்த முன்னுக்குப் பின் முரணான தகவல்களால் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அப்போதுதான் கூலி ஆட்களை வைத்து ருபிந்தர் கவுர் பாந்தரை கொலை செய்தது தெரியவந்தது. இந்தக் கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.