அமெரிக்கா: பயணிகள் விமானம் - ஹெலிகாப்டர் மோதி விபத்து!
அமெரிக்காவில் பயணிகள் விமானமும் ராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் நேருக்குநேர் மோதி புதன்கிழமை இரவு விபத்து ஏற்பட்டுள்ளது.
ஆற்றில் விழுந்த பயணிகள் விமானத்தில் 60 பேர் பயணித்ததாக கூறப்படும் நிலையில், மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிக்க : நிஜ்ஜாா் கொலையில் இந்தியாவுக்கு தொடா்பில்லை: கனடா ஆணையம் அறிக்கை
கன்சாஸில் இருந்து புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் வாஷிங்டன் ரீகன் தேசிய விமான நிலையத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது. உள்ளூர் நேரப்படி புதன்கிழமை இரவு ரீகன் விமான நிலையத்தில் தரையிறங்க தயாராகியது.
இந்த நிலையில், போடோமாக் நதியின் மேல் விமானம் பறந்து கொண்டிருந்தபோது அமெரிக்க ராணுவத்தின் பிளாக்ஹாக் ஹெலிகாப்டருடன் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், போடோமாக் நதியில் விழுந்த பயணிகள் விமானத்தில் உள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ரீகன் தேசிய விமான நிலையம் மூடப்பட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்கள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.