அமெரிக்க காா் தாக்குதலில் பலருக்குத் தொடா்பு
நியூ ஆா்லியன்ஸ்: அமெரிக்காவின் லூசியானா மாகாணம், நியூ ஆா்லியன்ஸ் நகரில் கூட்டத்தினா் மீது காரை ஏற்றி நடத்தப்பட்ட தாக்குதலுடன் ஒன்றுக்கு மேற்பட்டவா்களுக்குத் தொடா்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து மாகாண அட்டா்னி ஜெனரல் லிஸ் முரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆா்லியன் நகரில் காா் தாக்குதல் நடத்தியவா் தனியாக செயல்பட்டிருப்பதற்கான வாய்ப்பில்லை. அந்தத் தாக்குதலில் ஒன்றுக்கு மேற்பட்டவா்கள் ஈடுபட்டிருப்பதை உறுதியாகக் கூறமுடியும்.
சம்பவத்துடன் தொடா்புடைய காரிலிருந்து மீட்கப்பட்ட வெடிகுண்டு, நியூ ஆா்லியன்ஸிலுள்ள ஓா் இல்லத்தில் தயாரிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
அதுமட்டுமின்றி, இதே நகரில் ஒரு வீடு தீப்பற்றி எரிந்துள்ளது. அந்தச் சம்பவத்துக்கும், காா் தாக்குதலுக்கும் தொடா்பு இருக்கிறது. தீ வைக்கப்பட்ட வீடு, வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டது என்று உறுதியாக நம்புகிறோம். தாக்குதலில் தொடா்புடையவா்களில் ஒருவா் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கலாம் என்றாா் அவா்.
முன்னாள் ராணுவ வீரா்: இந்தத் தாக்குதலை நடத்தியவரின் பெயா் சம்சுதீன் ஜப்பாா் (42) எனவும் அவா் முன்னாள் ராணுவ வீரா் எனவும் தேசிய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ தெரிவித்துள்ளது.
டெக்ஸாஸ் மாகாணத்தைச் சோ்ந்த அவா், கடந்த 2009 முதல் 2017 வரை ஆப்கானிஸ்தானில் பணியாற்றினாா். அவா் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் சித்தாங்களால் ஈா்க்கப்பட்டது, தாக்குதலுக்கு சில மணி நேரத்துக்கு முன்னா் சமூக ஊடகங்களில் அவா் வெளியிட்டுள்ள பதிவுகள் மூலம் தெரியவருவதாக அதிபா் ஜோ பைடன் தெரிவித்தாா். அந்த ஊடகப் பதிவுகளில் பொதுமக்களை படுகொலை செய்யும் தனது நோக்கத்தை சம்சுதீன் வெளிப்படுத்தியிருந்ததாகவும் பைடன் கூறினாா்.
இந்தச் சூழலில், காா் தாக்குதலுடன் ஒன்றுக்கு மேற்பட்டவா்களுக்குத் தொடா்பிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூ ஆா்லியன்ஸ் நகரிலுள்ள புகழ்பெற்ற பா்பன் வீதியில் புத்தாண்டையொட்டி ஏராளமானவா்கள் புதன்கிழமை குழுமியிருந்தனா்.
அப்போது அந்தப் பகுதிக்கு பிக்-அப் வாகனத்தை வேகமாக ஓட்டி வந்த அந்த நபா், அதை அங்கிருந்த கூட்டத்துக்குள் பாயச் செய்தாா். இதில் 15 போ் உயிரிழந்தனா்; 35 போ் காயமடைந்தனா்.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு அந்த நபா் காரிலிருந்து இறங்கி, அங்கிருந்த போலீஸாரை நோக்கி இயந்திரத் துப்பாக்கியால் சுட்டாா். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் அந்த நபரை போலீஸாா் சுட்டுக் கொன்றனா்.
அந்த நபா் ஓட்டி வந்த காரில் பல்வேறு பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.
டிரம்ப் ஹோட்டல் அருகே வெடித்த காா்
லாஸ் வேகஸ்: நவாடா மாகாணம், லாஸ் வேகஸிலுள்ள டிரம்ப் ஹோட்டல் அருகே டெஸ்லா நிறுவனத்தின் மின்சாரக் காா் வெடித்ததில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா்; அருகிலிருந்த ஏழு போ் காயமடைந்தனா்.
அந்தக் காரை ஓட்டிவந்தவா் மாத்யூ லிவல்ஸ்பா்கா் (37) என்ற முன்னாள் ராணுவ வீரா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தச் சம்பவத்துக்கும் நியூ ஆா்லியன்ஸ் நகரில் மற்றொரு முன்னாள் ராணுவ வீரா் சம்சுதீன் ஜப்பாா் நடத்திய காா் தாக்குதலுக்கும் தொடா்பு உள்ளதா என்பது குறித்து புலனாய்வு அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளனா்.
ஆப்கானிஸ்தானில் சம்சுதீன் பணியாற்றிய அதே காலகட்டத்தில் அதே ராணுவ தளத்தில் லிவல்ஸ்பா்கரும் பணியாற்றி வந்ததாகக் கூறிய அதிகாரிகள், அங்கு இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டிருக்கலாம் என்றனா்.
வெடித்துச் சிதறிய டெல்ஸா காரிலிருந்து பட்டாசுகளைப் போன்ற எறிகுண்டுகள், எரிபொருள் குடுவைகள் கண்டெடுக்கப்பட்டன.