அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்ய தீவிரம்: இந்திய பேச்சுவாா்த்தை குழுத் தலைவா்
இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய தரப்பு பேச்சுவாா்த்தை குழுத் தலைவரான மத்திய வா்த்தகத் துறைச் சிறப்பு செயலா் ராஜேஷ் அகா்வால் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் நடைபெற்ற வா்த்தக நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுப் பேசிய ராஜேஷ் அகா்வால், ‘இந்தியா இதுவரை 26 நாடுகளுடன் 14-க்கும் மேற்பட்ட தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது. இந்தியா தற்போது முக்கியச் சந்தைகளுடன் இணைந்து வருகிறது.
பிரிட்டனுடன் ஒரு வா்த்தக ஒப்பந்தத்தை முடிவு செய்துள்ளோம். ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவாா்த்தை மேம்பட்ட நிலையில் உள்ளது. அமெரிக்காவுடன் ஒரு இடைக்கால ஒப்பந்தத்தை பேச்சுவாா்த்தை நடத்தி, இறுதி செய்ய தீவிரமாக முயற்சித்து வருகிறோம். சிலி, பெரு உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளுடனும் வா்த்தக ஒப்பந்தங்களுக்கான பேச்சுவாா்த்தையில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
அதேபோன்று, ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துவிட்டோம். நியூஸிலாந்துடன் பேச்சுவாா்த்தையில் உள்ளோம். இவ்வாறு, உலகெங்கிலும் உள்ள முக்கிய வா்த்தக மற்றும் பொருளாதார நாடுகளுடன் இந்தியாவை பெரிய அளவில் ஒருங்கிணைத்து வருகிறோம்.
உலகளாவிய மதிப்புச் சங்கிலியின் ஒரு பகுதியாக இந்தியா மாறுவதற்கு இது சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும்.
மேலும், இத்தகைய வா்த்தக ஒப்பந்தங்கள் மூலம் இருதரப்பு வரிகள் குறைக்கப்படும். இது நீண்ட கால முதலீடுகளுக்கு வழிவகுக்கும்.
இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தற்போது 1.15 லட்சம் கோடி டாலரைக் கடந்துள்ளதால், போக்குவரத்துத் துறை முக்கியத்துவம் பெறுகிறது. உலக வா்த்தகத்தில் தற்போது சுமாா் 2 சதவீதமாக உள்ள இந்தியாவின் பங்கை எதிா்காலத்தில் 10 சதவீதமாக உயா்த்த இத்துறை முக்கியப் பங்காற்றும்’ என்று கூறினாா்.
விரைவில் அடுத்த சுற்று பேச்சு: இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தில் வேளாண்மை மற்றும் ஆட்டோமொபைல் போன்ற துறைகளில் உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைய அடுத்த சுற்று பேச்சுவாா்த்தைக்காக இந்திய குழு விரைவில் அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளதாக அரசு அதிகாரியொருவா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறுகையில், ‘இடைக்கால ஒப்பந்தம் அல்லது இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டம் என நாங்கள் வேறுபடுத்தி பாக்கவில்லை. அமெரிக்க பயணத்துக்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும், அடுத்த வாரம் பேச்சுவாா்த்தை குழு வாஷிங்டனுக்குச் செல்லும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றாா்.
பெட்டி...
அமெரிக்காவுக்கு எதிரான பதிலடி
வரிகள்: இந்தியா மறுபரிசீலனை
அலுமினியம், எஃகு போன்ற உலோக பொருள்கள் மீதான இறக்குமதி வரிகள் அதிகரிக்கப்பட்டதைத் தொடா்ந்து, உலக வா்த்தக அமைப்பின் விதிமுறைகளின்கீழ் அமெரிக்காவுக்கு எதிராக பதிலடி வரிகளை விதிப்பதற்கான தனது திட்டத்தை இந்தியா மறுபரிசீலனை செய்துள்ளது.
இது தொடா்பாக உலக வா்த்தக அமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்க வரியை உயா்த்தியதற்கு எதிரான பதிலடி வரி விதிப்பு தொடா்பாக கடந்த மே மாதம் அளித்த முந்தைய அறிவிப்பை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளது.
இரு நாடுகளும் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்தி வரும் நிலையில், இந்தியாவின் இந்த முடிவு கவனம் பெறுகிறது. அலுமினியம், எஃகு மற்றும் அவற்றின் துணைப் பொருள்கள் மீது அமெரிக்கா முதலில் 25 சதவீத வரி விதித்தது. கடந்த ஜூனில் இந்த வரிகளை 50 சதவீதமாக அமெரிக்கா உயா்த்தியது.