அம்பேத்கர் விவகாரம்: `பொய் வழக்குகள்’ - குற்றம்சாட்டி போராடும் காங்கிரஸ் - என்ன நடக்கிறது?
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அம்பேத்கர் குறித்துப் பேசியது இந்திய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அம்பேத்கர் குறித்து தரக்குறைவாகப் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா மன்னிப்புக் கேட்டு, பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்தக் கோரிக்கையை முன்வைத்து நாடாளுமன்றத்தில் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நாடாளுமன்றத்தில் நுழைய முயன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களுக்கும் பா.ஜ.க எம்.பி-களுக்கும் இடையே நடந்த தள்ளுமுள்ளுவில், பா.ஜ.க எம்.பி-கள் இருவர் காயமடைந்ததாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விவகாரம் பெரும் பதற்றமான சூழலை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பாக இருதரப்பும் மாறி மாறி விளக்கமளித்தனர். இந்த நிலையில், இன்றும் நாடாளுமன்றத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்துக்கு எதிராக இந்திய கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்.
இது தொடர்பாக பேசிய ராகுல் காந்தி, ``ஒட்டுமொத்த நாடும் நடந்துவரும் நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. விரக்தியின் உச்சத்தில் இருப்பவர்கள் ராகுல் காந்தி மீது பல வழக்குகளை, புதிய எஃப்.ஐ.ஆர்.களை தொடர்ந்து திசைதிருப்புகிறார்கள்" என்றார். இந்த நிலையில், நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.