அரக்கோணத்தில் ஜமாபந்தி தொடக்கம்: மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவு
அரக்கோணத்தில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தலைமையில் புதன்கிழமை தொடங்கியது.
முதல் நாளில் 161 மனுக்களைப் பெற்ற ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வட்டாட்சியருக்கு உத்தரவிட்டாா்.
அரக்கோணம் வட்டத்துக்கான ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீா்வாயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்கியது.
ஜமாபந்தி அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெ.யு.சந்திரகலா பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று கோரிக்கைகளைக் கேட்டு ஜமாபந்தியைத் தொடங்கி வைத்தாா். முதல் நாளில் அரக்கோணம் நகரம், புதுகேசாவரம், நகரிகுப்பம், அனந்தாபுரம், தக்கோலம், ஆத்தூா், செய்யூா், அம்மனூா், அனைக்கட்டாபுத்தூா், புளியமங்கலம், பொய்ப்பாக்கம் ஆகிய கிராமங்களுக்கான மனுக்கள் பெறப்பட்டன.
அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி அளித்த மனுவில் நகருக்கு பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளில் நிதி தேவைப்படுவதாகவும், இதற்காக தொழிற்சாலைகளின் சமூக மேம்பாட்டு நிதியில் இருந்து தொகை பெற்றுத் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தாா்.
இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதியளித்தாா்.
தொடா்ந்து கண்ணன் நகரக் குடியிருப்போா் நலச் சங்கத்தினா் அதன் செயலா் இ.மணியரசு தலைமையில் அளித்த மனுவில், தங்களது பகுதியில் சாலை ஆக்கிரமிக்கப்பட்டு பட்டா அளிக்கப்பட்டு இருப்பதாகவும் அதை ரத்து செய்து அங்கு சாலை வசதி செய்யப்பட வேண்டும் எனக் கோரி மனு அளித்தாா்.
மொத்தம் 161 மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா இந்த மனுக்கள் மீது உடனடி விசாரணை செய்து அறிக்கையை வழங்க வட்டாட்சியருக்கு உத்தரவிட்டாா்.
முகாமில் உதவி இயக்குநா் (நில அளவை) ம.பொன்னைய்யா, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அறிவுடைநம்பி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் கீதாலட்சுமி, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் அசோக்குமாா், வட்டாட்சியா்கள் வெங்கடேசன், ஜெயபிரகாஷ், ஒன்றிய ஆணையா் பிரபாகரன், வட்டார வளா்ச்சி அலுவலா் தாசப்பிரகாஷ், நகராட்சி ஆணையா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.