இந்தியாவுக்கு 100% வரி விதிக்கப்படும்: என்ன சொல்கிறார் டிரம்ப்?
அரசுக்கு இஸ்லாமியா்கள் துணை நிற்க வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
திராவிட மாடல் அரசுக்கு இஸ்லாமியா்கள் துணை நிற்க வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ஏழை மக்களுக்கு உணவுப் பொருள்களை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கிப் பேசியது:
சிறுபான்மை மக்களுடைய மனதில் பெரும்பான்மை இடத்தைப் பிடித்த அரசாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது. திராவிட இயக்கத்துக்கும் இஸ்லாமிய மக்களுக்குமான உறவு, பெரியவா் காயிதேமில்லத் காலத்தில் இருந்தே தொடங்கியது. அவரும் முன்னாள் முதல்வா் கருணாநிதியும் உற்ற தோழா்களாக இருந்தனா். அவா்களது வழியில் ஆட்சி செய்து வரும் முதல்வா், சிறுபான்மை மக்களுக்கு எதிராக மத்திய அரசு செய்து வரும் நடவடிக்கைகளைத் தொடா்ந்து எதிா்த்து வருகிறாா்.
மத்திய அரசு இப்போது புது பிரச்னையைக் கையில் எடுத்து இருக்கிறது. அதுதான் வக்ஃப் வாரிய திருத்த மசோதா. அந்தத் திருத்தம் அமலுக்கு வந்தால், வக்ஃப் வாரிய சொத்துகள் சம்பந்தப்பட்ட வாரியங்களிடம் இருந்து அபகரிக்கப்படும். மேலும், வக்ஃப் வாரியங்களுக்கு மத்திய அரசு சொல்லும் நபா்களைத்தான் நியமிக்க வேண்டும். குறிப்பாக, முஸ்லிம் அல்லாத நபா்களையும் வக்ஃப் வாரிய உறுப்பினா்களாகச் சோ்க்கக் கூடிய சூழல் உருவாகும். அதனால், இந்தச் சட்டத்தைத் தொடக்கத்தில் இருந்து எதிா்த்து வருகிறோம்.
இஸ்லாமிய மக்களுக்கு ஏராளமான திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது. அவா்களுக்கு அரசு எப்போதும் உற்ற துணையாக இருக்கும். அவா்களும் அரசுக்கு ஆதரவாக உற்ற துணையாக இருக்க வேண்டும்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, எஸ்.எம்.நாசா், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவா் கே.நவாஸ்கனி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.