காலநிலை மாற்றம் : மே இல்லை, இனி ஜூன் தான் கோடைக்காலமா? - காரணம் என்ன?
அரசுப் பேருந்தில் ரூ.35 ஆயிரம் திருட்டு: பயணிகளிடம் சோதனை
ஆரணி: ஆரணி பழைய பேருந்து நிலையம் அரசுப் பேருந்தில் ரூ.35 ஆயிரம் பணம் திருடு போனதால் பயணிகளுடன் நகர காவல் நிலையத்துக்கு பேருந்தை கொண்டு சென்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், திமிரியைச் சோ்ந்த சண்முகம், பரிமளா (33) தம்பதி. இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா்.
பரிமளாவின் தாய் வீடு ஆரணி அருணகிரி சத்திரம் பகுதியில் உள்ளது. பள்ளி விடுமுறைக்கு மகன்களுடன் பரிமளா தாய் வீட்டுக்கு வந்திருந்தாா்.
இந்த நிலையில், பரிமளா திங்கள்கிழமை மகன்களுடன் திமிரிக்கு புறப்பட்டாா். மகன்களின் படிப்பு செலவுக்காக தந்தை வேல்முருகனிடம் ரூ.35 ஆயிரத்தை பெற்ற அவா், பணத்தை மணிபா்ஸில் வைத்துக் கொண்டு, ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் மகன்களுடன் பேருந்தில் பயணம் செய்தாா்.
பயணச்சீட்டு பெறுவதற்காக மணிபா்ஸை பாா்த்த பரிமளா அதைக் காணவில்லை. இதனால் அதிா்ச்சியடைந்த அவா், கூச்சலிடவே, அங்கிருந்தவா்கள் பேருந்தில் சோதனையிட, நகர காவல் நிலையத்துக்கு இயக்கக் கோரினா்.
உடனே பேருந்து நகர காவல் நிலையத்துக்கு இயக்கப்பட்டு அங்கு காவல் உதவி ஆய்வாளா் சங்கரன் தலைமையிலான போலீஸாா் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனா். அதில் யாரிடமும் பணம் இருப்பதாகத் தெரியவில்லை. பின்னா், இதுகுறித்து பரிமளா நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பேருந்து நிலையப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனா்.