கர்நாடகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ‘ரெட் அலார்ட்’! 5 பேர் பலி
காலநிலை மாற்றம் : மே இல்லை, இனி ஜூன் தான் கோடைக்காலமா? - காரணம் என்ன?
கோடைக்காலம் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது மே மாதமும், கொளுத்தும் வெயிலும், கோடை விடுமுறையும்தான். இப்படி காலம்காலமாக கோடைக்காலம் மே மாதத்துடனே பின்னிப்பிணைந்து இருக்கிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதும் அதன் தாக்கத்தை மனதில் வைத்து தான். கடந்த சில ஆண்டுகளாகவே கோடையைவிட ஜூன் மாதத்தில தான் அதிகப்பட்ச வெப்பநிலை பதிவாகி வருவதாக, டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

இன்னும் ஒரு11 நாள்களில் இந்தாண்டு மே மாதமும் முடிவடைய உள்ள நிலையிலும், சென்னையின் பல்வேறு இடங்களில் இதுவரை 39°c வெப்பநிலையே பதிவாகியுள்ளது. தற்போது மழையும், மேகமூட்டமும் என காலநிலை இருப்பதால் வெப்பம் அதிகரிப்பதற்க்கான வாய்ப்பும் இல்லை. 40°c வெப்பநிலை தாண்டவில்லை என்பது ஒருபுறம் நிம்மதி அளிக்கிறது. ஆனால், கடல் காற்றின் மாற்றத்தால் வருகின்ற ஜூன் மாதம், மே மாதத்தைவிட அதிக வெப்பமான காலமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தொடர் காலநிலை மாற்றத்தால், 'கோடைக்காலம் என்பது மே மாதத்தில் இருந்து ஜூன் மாதத்திற்கு மாற்றம் அடைந்திருக்கிறதா' என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த காலநிலை மாற்றத்திற்கு காரணம் என்ன; வரும் காலங்களில் காலநிலை எப்படி இருக்கப்போகிறது என்பதை விளக்குகிறார் பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு அரசின் காலநிலை மாற்ற நிர்வாகக்குழு உறுப்பினருமான சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கோ.சுந்தர்ராஜன்.

"தற்போது கடல்பகுதிகள் வரலாற்றில் இல்லாத அளவிற்கு வெப்பமடைந்து இருக்கிறது. 8 லட்சம் ஆண்டுகளாக இல்லாத அளவிளான கார்பன் அளவு தற்போது வளிமண்டலத்தில் இருக்கிறது. இதுதான் வானிலை மற்றும் காலநிலை மாற்றத்திற்கு மிக முக்கிய காரணமாக அமைகிறது. இந்த மாற்றங்கள் இங்கு மட்டும் நிகழவில்லை. உலகின் பல்வேறு இடங்களிலும் காலநிலை மாறுபாடு அடைந்திருக்கிறது. தற்போது ஆஸ்திரேலியாவில் குளிர்காலம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், அங்கு வெயில் வாட்டி வதைக்கிறது.
கார்பனின் அளவு அதிகரிப்பதற்குக் காரணம், நாம் அதிகளவு பெட்ரோல், டீசல், எரிவாயு, நிலக்கரி போன்றவற்றை பயன்படுத்துவதுதான். இவற்றை பயன்படுத்துவதன் மூலம் அதிகளவு கார்பன் வெளியாகி வளிமண்டலத்தில் தங்கி விடுகிறது. வளிமண்டலத்தில் கார்பனின் அளவு அதிகமாக இருப்பதால், விண்வெளியில் இருந்து பூமியின் உள்ளே வரும் சூரிய வெப்பத்தை புவியானது வெளியேற்றமுடியாமல் பூமியிலேயே தக்க வைத்துக்கொள்கிறது. இதனால், புவி மேற்பரப்பில் தங்கியிருக்கும் சூரிய ஒளியே புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணம்.
வரும் காலங்களில் கோடைக்காலத்தின் அளவு அதிகமாகவும், குளிர்காலத்தின் அளவு குறைவாகவும் இருக்கும். அதேநேரம் கோடையில் அதிகபட்ச வெப்பமும், குளிர்காலத்தில் அதிகபட்ச குளிரும் பதிவாகும். இதுதான் வரும் காலங்களில் புதிய இயல்பாக அமையும். இது மனிதர்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இதற்காக முன்கணிப்பு நடவடிக்கை மாதிரிகள் நம்மிடையே இல்லை. கடந்த 150 வருடங்களாக எடுத்த முன்மாதிரி கணிப்புகளையும், நடவடிக்கைகளையும் நாம் மறுஆய்வு செய்ய வேண்டும்.
2070-க்குள் நாம் கார்பன் சமநிலையை அடைந்துவிடுவோம் என இந்திய அரசு கூறியிருக்கிறது. ஆனால், தனிமனிதர்கள் தங்களால் முடிந்த அளவு சூரிய சக்தி, காற்றாலை சக்தி, பொது போக்குவரத்து முறைக்கு மாறுவது, பிளாஸ்டிக் மற்றும் புதை படிம எரிபொருள்களின் பயன்பாட்டை குறைத்துக்கொள்வது போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

தனிமனிதர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த பொறுப்புணர்வு இருந்தால் மட்டுமே கார்பனின் அளவைக் கட்டுக்குள் கொண்டு வந்து, காலநிலை மாற்றத்தை தடுக்க முடியும்'' என்கிறார் சுந்தர்ராஜன்.