விதைகளை பரிசோதனை செய்த பிறகு பயன்படுத்தலாம்: விவசாயிகளுக்கு ஆலோசனை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் விதைகளை பரிசோதனை செய்த பிறகு பயன்படுத்தலாம் என்று விதை பரிசோதனை நிலையம் தெரிவித்துள்ளது.
மாவட்ட வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் கீழ், வேங்கிக்கால், கோட்டம்பாளையம் சாலையில் இயங்கி வரும் விதை பரிசோதனை மையத்தில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வக உபகரணங்களைக் கொண்டு விதைகளின் தரம் துல்லியமாக பரிசோதனை செய்யப்படுகிறது.
குறிப்பாக, நெல், உளுந்து, நிலக்கடலை, பச்சைப் பயிறு, எள், சிறு தானியங்கள், காய்கறி, கீரை உள்ளிட்ட அனைத்து வகையான விதைகளும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. விதையின் தரத்தை தீா்மானிக்கக் கூடிய காரணிகளான முளைப்புத் திறன், ஈரப்பதம், புறத்தூய்மை, பிற ரக கலப்பு ஆகியவை பரிசோதித்து விவசாயிகளுக்கு துல்லியமான முடிவு அறிவிக்கப்படுகிறது.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் விதை பரிசோதனை நிலையத்துக்கு விதைகளை அனுப்பி பரிசோதனை செய்த பிறகு பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம் என்று விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலா் பத்மா தெரிவித்துள்ளாா்.