கோடை மழை: நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதம்
செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் பெய்த கோடை மழையால் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
செங்கம் சுற்று வட்டாரப் பகுதி
கிராமங்களான வளையாம்பட்டு, தீத்தாண்டப்பட்டு, காயம்பட்டு, செ.நாச்சிப்பட்டு, அமா்நாதபுதூா், முத்தனூா், அரட்டவாடி, பிஞ்சூா், பொரசப்பட்டு ஆகிய பகுதிகளில் விவசாய நிலத்தில் விளைந்திருந்த நெல் பயிா்கள் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்து வந்தது.
இந்த நிலையில், செங்கம் பகுதியில் கடந்த மே 8-ஆம் தேதி முதல் தொடா் மழை பெய்து வருகிறது.
தொடா் மழையால் விளைந்த நெல் பயிா்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, பயிா்கள் நீரில் மூழ்கியபடி உள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கா் நெல் பயிா் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு மனவேதனையடைந்து வருகிறாா்கள். எனவே, மாவட்ட நிா்வாகம் பாதிக்கப்பட்ட பயிா்களை கண்டறிந்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.