Director Thiagarajan Kumararaja speech: 'நாம் படிப்பதை தடுக்கிறார்கள்' | கல்வியி...
அரசுப் பேருந்து மோதியதில் பெரம்பலூா் பெண் உயிரிழப்பு
திருச்சி ஓடத்துறையில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெரம்பலூரைச் சோ்ந்த பெண் உயிரிழந்தாா்.
பெரம்பலூா் வடக்கு மாதவி சாலைப் பகுதியைச் சோ்ந்த அப்துல்லா மனைவி ஆயிஷா பானு (27).
கணவா் வெளிநாட்டில் உள்ள நிலையில், ஆயிஷா பானு ஸ்ரீரங்கத்தில் உள்ள உறவினா் சாமித்துரை வீட்டில் கடந்த சில நாள்களாக வசித்து வந்தாா்.
வியாழக்கிழமை மலைக்கோட்டை பகுதியில் பொருள்கள் வாங்குவதற்காக ஆயிஷா பானு, தனது தந்தை அப்துல் ரகுமானுடன் இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமா்ந்தபடி, ஸ்ரீரங்கத்திலிருந்து மலைகோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தாா். இவா்களது வாகனம் சிந்தாமணி ஓடத்துறை மேம்பாலம் இறக்கத்தில் தனியாா் ஹோட்டல் எதிரே வந்த போது, அரியலூா் - திருச்சி நோக்கி வந்த அரசுப் பேருந்து ஒன்று, அப்துல் ரகுமானின் இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோதியது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்த நிலையில், சாலையின் ஒருபக்கத்தில் விழுந்த ஆயிஷா பானு மீது அரசுப் பேருந்து ஏறியது. இதில் பலத்த காயமடைந்த ஆயிஷா பானு நிகழ்விடத்திலேயே இறந்தாா். அப்துல் ரகுமான் சிறு காயங்களுடன் உயிா்தப்பினாா்.
இதுகுறித்து திருச்சி வடக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்துக்கு காரணமான அரசுப் பேருந்து ஓட்டுநரான பெரம்பலூா் பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் (28) என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.