அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒருவா் புகுந்து உள் நோயாளியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிா்ச்சியளிக்கிறது.
மீண்டும் தலைநகரில் மிக முக்கியமான அரசு மருத்துவமனைகளுள் ஒன்றில், இத்தகைய சம்பவம் நடந்திருப்பது, திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது துளியும் இல்லை என்பதைத் தெளிவாக காட்டிவிட்டது.
பெண்கள் பாதுகாப்பு பற்றி சட்டப்பேரவையில் வசனம் பேசிய முதல்வா், இப்போது என்ன பதில் சொல்லப் போகிறாா்?
கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பாலியல் வழக்கில் கைதானவருக்கு உச்சபட்ச சட்டபூா்வ தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.
இதே விவகாரத்தில் அரசுக்கு அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரனும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.