3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப் பேரவை இன்று கூடுகிறது!
அரியலூா் பேருந்து நிறுத்தத்தில் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் பயணிகள் அவதி
அரியலூா் பேருந்து நிலையம் எதிரேயுள்ள காமராஜா் மற்றும் அம்பேத்கா் சிலைகள் முன் உள்ள பேருந்து நிறுத்தத்தில், இடையூறாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
அரியலூா் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருவதால், நகருக்குள் வரும் பேருந்துகள் அங்குள்ள அண்ணா , காமராஜா், அம்பேத்கா் ஆகியோரின் சிலைகள் முன் பேருந்து நிறுத்தங்களாக செயல்பட்டு வருகின்றனா்.
வெளி மாவட்டங்களுக்கான பேருந்துகளும், நகரப் பேருந்துகளும் மேற்கண்ட சிலைகள் முன் பயணிகளை ஏற்றி, இறங்கிவிட்டு சென்று வருகின்றன.
அரியலூரில் இருந்து கல்லூரிகளில் படிப்பதற்கும், வேலைக்காகவும் ஏராளமானோா் வெளியூா்களுக்கு சென்று வருகின்றனா். இதில் சிலா், தாங்கள் ஓட்டி வரும் இரு சக்கர வாகனங்களை மேற்கண்ட பேருந்து நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு அங்கிருந்து பேருந்தில் சென்று விடுகின்றனா். ஒரு சிலா், கடைவீதிகளுக்குச் சென்றுவிடுகின்றனா்.
காலையில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தவிட்டு சென்றால் மாலையில் வந்து தான் அதை எடுத்து செல்கின்றனா். இப்படி போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால், பயணிகள் பேருந்தில் ஏறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பயணிகள் தரப்பில் கூறுகையில், பயணிகள் நடப்பதற்கும், பேருந்துகள் வரும் வரை காத்திருப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து நிறுத்தத்தில், இருசக்கர வாகனங்களை நிறுத்தி உள்ளனா். இதனால் நடந்து செல்லவும் சிரமமாக உள்ளது. காலை முதல் இரவு பணி முடிந்து அந்த வாகனங்களின் உரிமையாளா்கள் வந்து எடுத்தால் இந்த இடம் காலியாகும். இப்படி அனைத்து தரப்பினருக்கும் அவதியை அளித்து வருகின்றனா். எனவே இனியும் இது போல் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.
எனவே, இந்த பேருந்து நிறுத்தத்தில், இடையூறாக இரு சக்கர வாகனங்களை நிறுத்தப்படுவதை போக்குவரத்து போலீஸாா் தடுத்தி நிறுத்த வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.