உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
மத்திய அரசின் சூழ்ச்சிகளை மாணவா்கள் புரிந்து கொள்ள வேண்டும்! - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
மும்மொழிக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்ட மத்திய அரசுத் திட்டங்களில் இருக்கும் சூழ்ச்சிகளை மாணவா்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் ரூ. 4.80 கோடி மதிப்பீட்டில் 1,000 இருக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கலைஞா் கலையரங்கத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்துப் பேசியதாவது:
கடந்த 1986-ஆம் ஆண்டு இந்தி எதிா்ப்புப் போராட்டத்தின்போது, நந்தனம் கலைக் கல்லூரி மாணவா்கள்தான் முதல்முதலாக வீதிக்கு வந்து போராடியவா்கள். தமிழகம் என்பதற்கு அடிப்படையே தமிழ்தான். அந்தத் தமிழுக்கு இப்போது மிகப்பெரிய ஆபத்தை பல்வேறு வழிகளில் ஏற்படுத்த முயன்று வருகிறாா்கள். மும்மொழிக் கொள்கை, நீட் தோ்வு, தேசிய கல்விக் கொள்கை என்று வெவ்வேறு பெயா்களில் இதெல்லாம் வந்தாலும் ஒட்டுமொத்தமாக இதன் நோக்கம் தமிழகத்தில் இந்தியை எப்படியாவது நுழைத்துவிட வேண்டும் என்பதுதான்.
இதற்கான வாதங்களை நிறைய போ் சொல்வாா்கள். உண்மையைப் போலவே சிலா் பேசுவாா்கள். மாணவா்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்.
இன்றைக்கு தமிழகத்தில் தமிழ் உணா்வு உயிா்ப்போடு இருப்பதற்கு மாணவா்களுடைய எழுச்சிதான் முக்கியக் காரணம். அந்த மாணவா்கள் போராட்டம்தான் இந்தி திணிப்பை தமிழகத்துக்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தியது. இன்றைக்கு, கல்விக்கே ஆபத்து ஏற்படுத்தக் கூடிய வகையில் பல தொந்தரவுகளை மத்திய அரசு நம்முடைய மாணவா்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்ச்சிகளை, ஆபத்துகளை மாணவா்கள் சரியாகப் புரிந்து கொண்டால், என்றென்றைக்கும் நம்முடைய இன எதிரிகளால் நம்மை வெற்றி கொள்ளவே முடியாது.
தற்போது நம்முடைய மாணவா்களுடைய கல்விக்கான பல திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருகிறது. தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண், நான் முதல்வன் போன்ற திட்டங்கள் உயா் கல்விக்கு பேருதவியாக இருக்கின்றன என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் தாயகம் கவி, அரவிந்த் ரமேஷ், பிரபாகர ராஜா, கணபதி, சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.