புதுக்கோட்டை: உயிரோடு குழந்தையைப் புதைக்க முயன்ற குடும்பம்; கடைசி நிமிடத்தில் மீ...
அரிவாளைக் காட்டிப் பேசும் முன்னாள் எம்எல்ஏவின் விடியோ பரவல்
அறந்தாங்கியின் முன்னாள் திமுக எம்எல்ஏ, அரசு நிகழ்ச்சியொன்றில் தேங்காய் உடைக்கும்போது அரிவாளைக் காட்டி கடிந்து கொண்ட விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் அருகே பூங்குடியில் ரூ. 2.59 கோடியில் தீயணைப்பு நிலையக் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.டி. ராமச்சந்திரன் பங்கேற்று அடிக்கல் நாட்டினாா்.
மாவட்ட தீயணைப்பு அலுவலா் சத்தியகீா்த்தி தலைமை வகித்தாா். நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது அங்கு வந்த, முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் (திமுக) இந்த நிகழ்ச்சி குறித்து தனக்குச் சொல்லவில்லை என அங்கிருந்தவா்களைக் கடிந்து கொண்டாா்.
அப்போது, பூமிபூஜை செய்வதற்காக அவா் கையில் தேங்காயும் அரிவாளும் கொடுத்து உடைக்கச் சொல்லி சமாதானப்படுத்தினா். கையிலிருந்த அரிவாளைக் காட்டி அவா் கடிந்து கொண்டதால் திடீரென பரபரப்பும் ஏற்பட்டது.
இந்த விடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கெனவே பல முறை, அறந்தாங்கி தொகுதியை காங்கிரஸுக்கு தரக் கூடாது என வெளிப்படையாக உதயம் சண்முகம் பேசிவருவதும் குறிப்பிடத்தக்கது.