அருணாசலில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் உறுதி! இறைச்சி விற்கத் தடை!
அருணாசல பிரதேசத்தின், லோங்டிங் மாவட்டத்திலுள்ள ஓரு கிராமத்தில், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லோங்டிங் மாவட்டத்தின், லுயாக்சிம் கிராமத்திலுள்ள, பன்றிகளின் ரத்த மாதிரிகளைச் சேகரித்து, அசாம் மாநிலத்திலுள்ள தேசிய பன்றிகள் ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சோதனையில், அங்கு ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அம்மாநில கால்நடை மருத்துவத் துறை, விரைவாக அந்த தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ள பொது அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், லுயாக்சிம் கிராமத்திலிருந்து சுமார் 1 கி.மீ. சுற்றளவுக்கு பாதிக்கப்பட்ட மண்டலமாகவும், அங்கிருந்து 10 கி.மீ. சுற்றளவுக்கு கண்காணிப்பு மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மற்றும் கண்காணிப்பு மண்டலங்களிலிருந்து பன்றிகளை வெளியே கொண்டு செல்வதற்கும், உள்ளே கொண்டு வருவதற்கும், பன்றி இறைச்சிகளின் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அப்பகுதிகளிலுள்ள தற்காலிக மற்றும் வார பன்றி இறைச்சி சந்தைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
SUMMARY
African swine fever confirmed in Arunachal. Meat sale banned.
இதையும் படிக்க: 5 டிவி, 14 ஏசி.. ரூ.60 லட்சத்தில் புனரமைக்கப்படும் தில்லி முதல்வர் மாளிகை!