அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 20 காளைகளை அடக்கி அபிசித்தர் முதலிடம்!
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 20 காளைகளை அடக்கி அபிசித்தர் முதலிடத்தைப் பெற்றார்.
பொங்கல் பண்டிகையையொட்டி, அலங்காநல்லூரில் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து இன்று தொடக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, அலங்காநல்லூர் கோயில் காளைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. தொடா்ந்து, போட்டியாளா்களின் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டு 9 சுற்றுகளாக இப்போட்டி நடைபெற்றது.
இதில், 20 காளைகளை அடக்கி அபிசித்தர் முதலிடத்தைப் பெற்றார். இவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
14 காளைகளை அடக்கி இரண்டாம் இடம் பிடித்த பொதும்பு ஸ்ரீதருக்கு ஆட்டோ பரிசாக வழங்கப்பட்டது. 10 காளைகளை அடக்கி மூன்றாம் இடம் பிடித்த மடப்புரம் கணேஷுக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.
சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட சேலம் பாகுபலி காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் இடத்தை தவறவிட்ட அபிசித்தர், இந்தாண்டு முதல் இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.