அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே வெளியீட்டு தேதி எப்போது?
அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
மார்வெல் திரைப்பட நிறுவனத்தின் அவெஞ்சர்ஸ்: என்ட்கேம் படத்துக்குப் பிறகு வெளியான அந்நிறுவனத்தின் படங்கள் எவையும் அவ்வளவாக ஹிட் கொடுக்கவில்லை. இந்த நிலையில்தான், அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே படத்துக்கான அறிவிப்பை படக்குழுவினர் அறிவித்தனர். இந்த படத்தில் அயர்ன்மேன் கதாபாத்திரத்தின் மூலம் புகழ்பெற்ற ராபர்ட் டோனி ஜூனியர் (ஆர்டிஜே) நடிக்கவிருப்பதால், இப்படத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
ஒரு காலகட்டத்தில் நஷ்டத்தில் சென்று கொண்டிருந்த மார்வெல் நிறுவனத்தை, அயர்ன்மேன் படத்தின் மூலம் ஒரு நிலையான இடத்துக்கு கொண்டு சேர்த்தவர் ஆர்டிஜே. இவருக்காகவே மார்வெல் படங்களின் ரசிகர்களாக மாறியவர்களும் உண்டு. அப்படி இருக்கையில், 2019 ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்: என்ட்கேம் படத்தில் அயர்ன்மேன் பாத்திரம் உயிரிழப்பதுபோல கதையை முடித்தனர்.
இதன் பிறகு வெளிவந்த மார்வெல் நிறுவனத்தின் படங்களோ இணையத் தொடர்களோ எதுவும் சொல்லும் அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனிடையேதான், டூம்ஸ்டே அறிவிப்பு வெளியானது. டூம்ஸ்டேவில் நடிக்கவிருக்கும் நடிகர்களின் பெயர்களுடன் அறிவிப்பு வெளியானது.
இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆர்டிஜேவின் டாக்டர் டூம்ஸ்டேவுக்கு எதிராக அவெஞ்சர்ஸ் பாத்திரங்கள், ஃபென்டாஸ்டிக் ஃபோர் பாத்திரங்கள், தன்டர்போல்ட்ஸ் பாத்திரங்களும் நடிக்கவுள்ளனர். இதன் காரணமாகவும் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
இந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாகவும் அடுத்தாண்டு மே மாதம் முதல்தேதியில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, அவெஞ்சர்ஸ்: சீக்ரெட் வார்ஸ் படமும் 2027 ஆம் ஆண்டில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.