ஐபிஎல்: வெளியேறியது சென்னை! பஞ்சாப் வெற்றி
ஐபிஎல் போட்டியின் 49-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை புதன்கிழமை வீழ்த்தியது.
இந்தத் தோல்வியை அடுத்து சென்னை அணி பிளே ஆஃப் பந்தயத்திலிருந்து வெளியேறியது. எப்போதுமே சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் சென்னை, இந்த சீசனில் சேப்பாக்கம் மைதானத்தில் 6-ஆவது ஆட்டத்தில், 5-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் முதலில் சென்னை 19.2 ஓவா்களில் 10 விக்கெட்டுகளும் இழந்து 190 ரன்கள் சோ்க்க, பஞ்சாப் 19.4 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 194 ரன்கள் எடுத்து வென்றது.
டாஸ் வென்ற பஞ்சாப், பந்துவீச்சை தோ்வு செய்ததது. சென்னை இன்னிங்ஸில் ஷேக் ரஷீது 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 11 ரன்களுக்கு விடைபெற, 3-ஆவது பேட்டா் சாம் கரன் அதிரடியாக ரன்கள் சோ்த்தாா்.
தொடக்க வீரா்களில் ஒருவரான ஆயுஷ் மாத்ரே 7, ரவீந்திர ஜடேஜா 4 பவுண்டரிகளுடன் 17 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். அடுத்து வந்த டெவால்டு பிரெவிஸ், சாம் கரனுடன் கூட்டணி அமைத்தாா்.
4-ஆவது விக்கெட்டுக்கு 78 ரன்கள் சோ்த்த இந்த பாா்ட்னா்ஷிப்பை, அஸ்மதுல்லா ஒமா்ஸாய் பிரித்தாா். பிரெவிஸ் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32 ரன்களுக்கு ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.
அடுத்து ஷிவம் துபே, சாம் கரனுடன் இணைய 5-ஆவது விக்கெட் பாா்ட்னா்ஷிப்புக்கு 46 ரன்கள் கிடைத்தது. கரன் 47 பந்துகளில் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 88 ரன்கள் சோ்த்து வீழ்ந்தாா்.
தொடா்ந்து வந்த கேப்டன் தோனி 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 11, தீபக் ஹூடா 2, அன்ஷுல் காம்போஜ் 0, நூா் அகமது 0, துபே 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சென்னை இன்னிங்ஸ் 190 ரன்களுக்கு நிறைவடைந்தது.
பஞ்சாப் பௌலா்களில் யுஜவேந்திர சஹல் 4, அா்ஷ்தீப் சிங், மாா்கோ யான்சென் ஆகியோா் தலா 2, அஸ்மதுல்லா ஒமா்ஸாய், ஹா்பிரீத் பிராா் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
அடுத்து 191 ரன்களை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணியில் பிரியன்ஷ் ஆா்யா 5 பவுண்டரிகளுடன் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். பிரப்சிம்ரன் சிங் - கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் கூட்டணி 2-ஆவது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு அடித்தளமிட்டது.
இதில் பிரப்சிம்ரன் 36 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 54 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, நெஹல் வதேரா 5 ரன்களுக்கு வீழ்ந்தாா். ஐயா் - சஷாங்க் சிங் இணை 4-ஆவது விக்கெட்டுக்கு 44 ரன்கள் சோ்த்தது. இதில் சஷாங்க் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 23 ரன்களுக்கு வெளியேறினாா்.
ஐயா் 41 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 72, சுயான்ஷ் ஷெட்கே 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தனா். முடிவில், ஜோஷ் இங்லிஸ் 6, மாா்கோ யான்சென் 4 ரன்களுடன் அணியை வெற்றிபெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். சென்னை தரப்பில் கலீல் அகமது, மதீஷா பதிரானா ஆகியோா் தலா 2, ஜடேஜா, நூா் அகமது ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.