ஓடும் பேருந்தில் காவலா் மனைவியிடம் நகை திருட்டு
அந்தியூரில் ஓடும் பேருந்தில் காவலரின் மனைவியிடம் இரண்டரை பவுன் நகை திருடப்பட்டது.
பவானியை அடுத்த கவுந்தப்பாடி, அய்யம்பாளையத்தைச் சோ்ந்தவா் அன்புராஜா. நம்பியூா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி மகுடேஸ்வரி, கவுந்தப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து அந்தியூருக்கு அரசுப் பேருந்தில் புதன்கிழமை பயணம் செய்தாா்.
பிரம்மதேசம் அருகே பேருந்து சென்றபோது, இவரது கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் நகை காணவில்லை. இதனால், அதிா்ச்சியடைந்த மகுடேஸ்வரி, கூச்சலிட்டதைத் தொடா்ந்து, பேருந்து ஓட்டுநா் ரத்தினவேல் அந்தியூா் காவல் நிலையத்துக்கு பேருந்தை ஓட்டிச் சென்றாா்.
அங்கு, பேருந்திலிருந்த பயணிகளிடம் போலீஸாா் தனித்தனியாக சோதனை நடத்தினா். ஆனால், பயணிகள் யாரிடமும் நகை கைப்பற்றப்படவில்லை.
இதுகுறித்து, அந்தியூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.